இலவச லேப்-டாப் வழங்கக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
திருப்பூர்: இலவச லேப்-டாப் வழங்கக்கோரி, இறுதியாண்டு கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் 147 மாணவர்கள், மாநில அரசு வழங்கும் இலவச லேப் - டாப் தங்களுக்கு வழங்கவில்லை, படிப்பு நிறைவடைய சில மாதங்களே உள்ளதால், புராஜெக்ட் பணிகள் பாதிக்கப்படுகிறது எனக்கூறி, கல்லூரி வாயிலில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து, போலீஸ் உதவி கமிஷனர் குணசேகரன், வடக்கு இன்ஸ்பெக்டர் ராஜசேகர் அங்கு விரைந்தனர். போலீசாரும், பேராசிரியர்களும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேசி, மறியலை கைவிட செய்தனர். மாணவர்களை கல்லூரி வளாகத்துக்குள் அழைத்து சென்று பேச்சு நடத்தினர். இதை தொடர்ந்து சமாதான மடைந்த மாணவர்கள், கலைந்து சென்றனர்.