உள்ளூர் செய்திகள்

ஜாதி சான்றிதழ் பெற முடியாமல் முதல் பட்டதாரி மாணவி தவிப்பு

பெற்றோரின் அறியாமையால், குறிப்பிட்ட தன் ஜாதி சான்றிதழை வாங்க முடியாமல், முதல் பட்ட தாரி மாணவி அலைக்கழிக்கப்பட்டு வருகிறார். பெற்றோர் யாரும் பள்ளி பக்கமே போகாத நிலையில், குடும்பத்தில் உடன் பிறந்தோர் யாருமின்றி தவிக்கும் மாணவி, தனக்கான சலுகையை பெற தனி ஆளாக போராடி வருகிறார்.சென்னை, கொளத்துார் அருகே புத்தகரத்தைச் சேர்ந்தவர் ராமன்; கொத்தனாராக உள்ள இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை. இவரது மனைவி திருவாரூரைச் சேர்ந்த தமிழரசி. இருவரும் பள்ளி பக்கமே ஒதுங்கியது இல்லை. இவர்களது ஒரே மகள் அமுல்பிரியா, 17. வேலைக்காக சென்னை வந்த இவர்களது குடும்பத்தில், அமுல்பிரியா முதல் பட்டதாரி.ளபிளஸ் 2 பாடத்தில், 467 மதிப்பெண் பெற்றுள்ளார். பி.காம் வணிகப்பிரிவில், எழும்பூரில் உள்ள அரசு மகளிர் கல்லுாரியில் சேர்ந்துள்ளார்.கொரோனாவால், ஆன்லைன் வகுப்புகளில் மட்டும் பங்கேற்று வருகிறார். இவரது பெற்றோர், இந்து அகமுடையார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். அமுல்பிரியா, ஐந்தாம் வகுப்பு பயிலும் போது, தாய் தமிழரசி, மாதவரம் தாசில்தார் அலுவலகத்தில், ஜாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளார். அதில், இவர்களது ஜாதியை, இந்து - உடையார் என, குறிப்பிட்டு கொடுத்துள்ளனர். போதிய விபரம் இல்லாததால், அவரும் அதை வாங்கிக் கொண்டார்.பிளஸ் 2 வரை, மாதவரம் தாசில்தார் அலுவலகத்தில் கொடுத்த, இந்து - உடையார் என்ற சான்றிதழ் ஏற்கப்பட்டது. தற்போது கல்லுாரியில் சேர்ந்த போது, முதல் பட்டதாரிக்கான சலுகையை பெற, அமுல்பிரியா முயற்சித்தார். இவரது ஜாதி சான்றிதழில் இடம் பெற்ற பெயரும், குறிப்பிட்ட பட்டியலில் உள்ள பெயரும் ஒத்து போகவில்லை. தான் இந்து - அகமுடையார் என தெரிவித்த போது, அதற்கான சான்றிதழை பெற முடியாமல், மாணவி போராடி வருகிறார்.இதுகுறித்து, அமுல்பிரியா கூறியதாவது:அப்பா, அம்மா படிக்கவில்லை. நான் ஒரே மகள். எனக்கு வாங்கிய ஜாதி சான்றிதழில் உள்ள தவறு அப்போது தெரியவில்லை. தவிர அச்சான்றிதழ் கையால் எழுதப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலக முத்திரை குத்தப்பட்டிருந்தது. அதை பள்ளியில் ஏற்றுக் கொண்டனர். ஆனால், கல்லுாரி நிர்வாகம் ஏற்கவில்லை.ளபுதிய ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்த போது, நான் பெற்ற சான்றிதழில் உள்ள தவறு, அப்போது தான் தெரிந்தது. இதற்காக வி.ஏ.ஓ., அலுவலகம் சென்று முறையிட்டேன். தாசில்தார் அலுவலகம் போக அறிவுறுத்தினர். அங்கிருந்து புழல் அலுவலகத்திற்கு அனுப்பினர். அங்கிருந்து மீண்டும் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு அனுப்பினர். அதன் பின், அவர்கள் மாதவரம் தாசில்தாரை அணுகி விண்ணப்பிக்க கோரினர். அவரிடம் சென்ற போது, ஆன்லைனில் தமிழ்நாடு இ- - சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தினார். அங்கே குறிப்பிட்ட என் ஜாதி சான்றிதழில் உள்ள தவறை சரி செய்ய வேண்டுமானால், &'பெற்றோரின் சான்றிதழ் வேண்டும்&' என்றனர். அவர்கள் பள்ளிக்கே செல்லவில்லை. அதனால், நான் இந்து - அகமுடையார் என்பதற்கு, குறிப்பிட்ட அச்சங்க அலுவலகத்திற்கு சென்று ஒரு சான்றிதழ் வாங்கி வர கூறினர். நான் அச்சங்கம் எங்கிருக்கிறது என தெரியாமல், கூகுளில் தேடினேன்; கிடைக்கவில்லை. இதற்கு மேல் என்னால் அலைய முடியவில்லை. ஜாதி சான்றிதழ் சமர்பிக்க முடியாததால், கல்லுாரியிலும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால், கல்லுாரி முதல்வர் கூறியதால் வகுப்பில் பங்கேற்க முடிந்தது. எனக்கான சான்றிதழை பெற, சம்பந்தப்பட்ட துறையினர் அக்கறை காட்டினால் உதவியாக இருக்கும். இவ்வாறு, அவர் கண்ணீர் மல்க கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்