ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் தமிழக அரசு தாமதத்தால் தவிப்பு
சென்னை: மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின்னும், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஆயுள் சான்றிதழ் வழங்க, தமிழக பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், தேர்வில் தேர்ச்சி பெற்ற, 90 ஆயிரம் பேர், வேலைக்கு சேர முடியாத நிலையில் உள்ளனர்.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, 2009 முதல், மாணவர்களுக்கான அடிப்படை கல்வி மற்றும் ஆசிரியர்களின் கல்வி தகுதியில், பல்வேறு விதிகள் ஏற்படுத்தப்பட்டன. இதன்படி, அனைத்து மாநிலங்களிலும், பத்தாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள், மத்திய அல்லது மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவித்திருந்தது.இந்த தேர்வுக்கான சான்றிதழ், ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள் வேலைக்கு சேராதவர்கள், மீண்டும் தகுதி தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வேண்டும் என கூறப் பட்டது. இதனால், பட்டதாரிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.இந்நிலையில், பட்டதாரிகளின் கோரிக்கைகளை ஏற்று, &'ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி சான்றிதழ்கள், இனி ஆயுள் முழுதும் செல்லும்&' என, மத்திய கல்வி அமைச்சகம் கடந்த மாதம் அறிவித்தது.இதையடுத்து, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்திய, &'சிடெட்&' என்ற, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அவர்களின் சான்றிதழ் ஆயுள் முழுதும் செல்லும். இதுகுறித்து, புதிய சான்றிதழ் எதுவும் வழங்கப்படாது என, அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியிடப்பட்டது.ஆனால், தமிழக பள்ளி கல்வித்துறையின், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழுக்கு, இன்னும் ஆயுள் கால அனுமதி வழங்கப்படவில்லை. மத்திய அரசின் ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஒன்றரை மாதமான பின்னும், பள்ளி கல்வித்துறை சார்பில், இதற்கான அரசாணை பிறப்பிக்கப்படவில்லை.இதன் காரணமாக, தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், 2013, 2017 மற்றும், 2019ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற, 90 ஆயிரம் பட்டதாரிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிக்கு சேர முடியாமல் உள்ளனர்.