விதிமுறை மீறி இயக்கிய ஏழு பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை
முறைகேடாக இயங்கி வந்த இரண்டு பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வேதாரண்யத்தில், பள்ளி வேன் கவிழ்ந்து ஒன்பது குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியை பலியான சம்பவத்தை அடுத்து, விதிமுறை மீறி ஓடும் பள்ளி வாகனங்களை, தினமும், காலை- மாலை பள்ளி நேரங்களில் ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டது.இதனையடுத்து, உடுமலை பகுதி நேர வட்டார போக்குவரத்து அலுவலக, மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். அப்போது, உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இயக்கப்பட்ட, இரண்டு பள்ளி வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும், அதிக குழந்தைகளை ஏற்றி சென்ற மூன்று வாகனங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். எப்.சி., காட்டாத ஒரு வாகனம், லைசென்ஸ் இல்லாத டிரைவர் ஓட்டிய ஒரு வாகனத்திற்கும் அபராதம் விதிக்கப்பட்டது.மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் கூறுகையில், உடுமலை தாலுகாவில் 97 பள்ளி வாகனங்கள் இயங்கி வருகின்றன. மேலும், ஆட்டோ, வேன் என 150க்கு மேற்பட்ட தனியார் வாகனங்களும் இயங்கி வருகின்றன. உரிய ஆவணங்கள் இல்லாமலும், கூடுதல் பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்கள் குறித்து தினமும் ஆய்வு செய்யப்படும். விதிமுறை மீறி இயங்கும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.