உள்ளூர் செய்திகள்

சத்துணவு வழங்காத அரசு பள்ளி :ஏழு ஆண்டுகளாக ஏமாறும் குழந்தைகள்

ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் ஊராட்சி சத்திரம் தெற்கு தெருவில், ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இங்கு, ஏழை மீனவ குழந்தைகள் படித்து வந்தனர். இடப் பற்றாக்குறையால் 2002ல், பள்ளி பிரிக்கப்பட்டு, வடக்கு தெருவில் புதிய பள்ளி துவங்கப்பட்டது. இங்கு 260 குழந்தைகள் படித்து வருகின்றனர்.பள்ளி துவங்கிய நாளிலிருந்து, இன்று வரை சத்துணவு வழங்கப்படவில்லை.இது தொடர்பாக, சமூக ஆர்வலர்கள் சிலர், கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் பயன் இல்லை. மதிய உணவு வழங்காததால், பெரும்பாலான குழந்தைகள், பள்ளிக்கு வரவில்லை. சிலர், சத்துணவு வழங்கப்படும் பள்ளிகளுக்கு, நீண்ட தூரம் சென்று படித்து வருகின்றனர்.இதுகுறித்து, கிராம கல்விக் குழு தலைவர் பப்பரத்தி கூறுகையில், புதிய பள்ளியில் சத்துணவு சமைப்பதில்லை. பழைய பள்ளிக்கு சென்று சாப்பிடுமாறு குழந்தைகளை கட்டாயப்படுத்துகின்றனர். ஒரு கி.மீ., தூரம் செல்ல வேண்டியிருப்பதால், குழந்தைகள் செல்வதில்லை என்றார்.ராமநாதபுரம் உதவி தொடக்க கல்வி அலுவலர் தாஸ் கூறுகையில், பள்ளிக்கு சத்துணவு வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் சத்துணவு வழங்கப்படும் என்றார்.மண்டபம் பி.டி.ஓ., நாகரத்தினம் கூறுகையில், இங்குள்ள, அனைத்து பள்ளிகளிலும் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இது போன்ற புகார், எதுவும் வந்ததாக தெரியவில்லை. இருப்பினும் விசாரிப்போம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்