கோவை ஸ்மார்ட் சிட்டி பணிகளை பார்க்க வந்தது டில்லி ஊடகக்குழு
கோவை: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பணிகள், கோவை மாநகராட்சியில் செயல்படுத்தி இருப்பது தொடர்பாக, டில்லியில் இருந்து வந்திருந்த, ஊடகக்குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.மத்திய அரசின், ஸ்மார்ட் சிட்டி திட்டம், கோவை மாநகராட்சியில், செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இன்னும் 9 பணிகள் முடியும் தருவாயில் இருக்கின்றன. இவற்றை பார்வையிட, பிரஸ் இன்பர்மேஷன் பீரோ கூடுதல் ஐ.ஜி., ராஜிவ் ஜெயின், மத்திய நகர்ப்புற வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சக ஆலோசகர்கள் நிலா பாண்டியன், காளிகா ஜெயின் ஆகியோர் தலைமையில், பி.டி.ஐ., ஏ.என்.ஐ., ஆல் இண்டியா ரேடியோ, துார்தர்ஷன் மற்றும் டில்லியை சேர்ந்த, பத்திரிகை நிருபர்கள் நேற்று கோவை வந்திருந்தனர்.அவர்களிடம், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியதாவது:குளங்களை மேம்படுத்தியதால், தனி நபர் பயன்படுத்தும் பொது இடத்தின் பரப்பு, 4.9 சதுர மீட்டராக அதிகரித்துள்ளது. குளக்கரையை ஆக்கிரமித்திருந்த, 20 ஆயிரத்து, 389 குடியிருப்புகள் அகற்றப்பட்டுள்ளன. 28 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், 7,680 குடும்பங்களுக்கு மாற்று வீடு வழங்கப்பட்டன. குளங்களை மறுசீரமைப்பு செய்தபின், தினமும், 2,000க்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். டி.பி.ரோடு, ரேஸ்கோர்ஸ் ஆகிய இடங்களில், மாடல் ரோடு உருவாக்கப்பட்டுள்ளது; கிராஸ்கட் ரோடு, டவுன் ஹாலில் பணிகள் நடந்து வருகின்றன. குப்பை சேகரிக்கும் வாகனங்களுக்கு ஜியோ பென்சிங் ஏற்படுத்தி, அதன் நகர்வுகளை கண்காணிக்கிறோம். தேவையற்ற இடங்களுக்கு செல்வதை தவிர்த்ததன் மூலம், எரிபொருள் செலவினம், 10 சதவீதம் குறைந்திருக்கிறது. சி.எப்.எல்., தெருவிளக்குகளை எல்.இ.டி.,யாக மாற்றி வருகிறோம். சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் அமைத்ததன் மூலம் ரூ.5.40 கோடி மிச்சமாகியுள்ளது. ஸ்மார்ட் சிட்டி நிதியில், 58 ஆயிரம் தெருவிளக்குகள் எல்.இ.டி.,களாக மாற்றப்பட்டன. அதற்கு முன், மின் கட்டணமாக ரூ.24.50 கோடி செலுத்தி வந்தோம். எல்.இ.டி.,யாக மாற்றிய பின், ரூ.14.83 கோடியாக குறைந்திருக்கிறது. பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீதான நடவடிக்கையை, ஆன்லைன் முறையில் கண்காணிக்கிறோம்.இவ்வாறு, கமிஷனர் கூறினார்.பார்த்துட்டு போலாம்னு வந்தோம்!பிரஸ் இன்பர்மேஷன் பீரோ கூடுதல் ஐ.ஜி.,ராஜிவ் ஜெயின் கூறுகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும் நகரங்களுக்கு, செய்தியாளர்களை அழைத்துச் சென்று விளக்குகிறோம். காஷ்மீர், ஸ்ரீநகர், உஜ்ஜயினி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சென்றிருக்கிறோம். கோவையில் நீர் நிலை மேம்பாடு, மாடல் ரோடு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தி இருப்பதாக தெரிவித்தனர். அவற்றை பார்வையிட வந்திருக்கிறோம், என்றார்.