உள்ளூர் செய்திகள்

ஐஸ்கிரீம் குச்சியில் எழுதப்பட்ட திருக்குறள்: விழிப்புணர்வு ஏற்படுத்தும் பள்ளி ஆசியர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஐஸ்கிரீம் குச்சியில், திருக்குறள் எழுதி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஆசிரியர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.பொள்ளாச்சி அருகே, ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த அறிவியல் பட்டதாரி ஆசிரியர் கீதா. இவர், ஐஸ்கிரீம் குச்சியில், 1,330 திருக்குறள்களையும் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.ஆசிரியர் கூறியதாவது:ஒன்றரை அடியில் வாழ்க்கைக்கு தேவையான அத்தனை கருத்துகளும் இடம் பெற்றுள்ள திருக்குறள், உலக அதிசயமாக போற்றப்பட வேண்டிய ஒரு பொக்கிஷமான நுாலாக உள்ளது. உலக பொதுமறையாம் திருக்குறளில் சொல்லாத கருத்துக்களே இல்லை.அந்த கருத்துக்களை மாணவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஐஸ்கிரீம் குச்சியில் திருக்குறளை எழுதியுள்ளேன். ஐஸ்கிரீம் குச்சியில் ஒரு பக்கத்தில் ஒரு குறளையும், அதனுடைய மறு பக்கத்தில் இன்னொரு குறளையும் எழுதி படைத்துள்ளேன். திருக்குறள் கருத்துக்களை மாணவர்களிடையே வித்தியாசமாகவும், புதுமையாகவும் கொண்டு செல்ல இந்த முயற்சி மேற்கொண்டேன்.ஐஸ்கிரீம் குச்சியில் எழுதி மாணவர்களை கவர்ந்து மனப்பாடம் செய்து வழிகாட்ட உத்தேசித்துள்ளேன். கடந்த, 25 ஆண்டுகளில், 1,200 மாணவர்கள் மட்டுமே தமிழகத்தில் மொத்தமாக, திருக்குறளை மனப்பாடம் செய்து முழுமையாக எழுதி சான்றிதழ், பரிசு பெற்றுள்ளனர்.கடந்த, மூன்று ஆண்டுகளாக நான் பணியாற்றும் பள்ளியில், மாணவர்கள் திருக்குறளை பார்த்து எழுதும் முயற்சி செய்து சான்றிதழ் பெற்றனர். அதில், நடப்பாண்டு, 1,330 திருக்குறளை முழுமையாக எழுதிய பள்ளி மாணவியர் தர்ஷினி, சாருமதி, அனுபிரியா, சுதாஸ்ரீ, விஷாலினி ஆகியோருக்கு பில்சின்னாம்பாளையம் அறிவுச்சோலை அறக்கட்டளை விருது மற்றும் சான்றிதழை வழங்கியது.மேலும், பில்சின்னாம்பாளையத்தில் நடந்த திருக்குறள் தின விழாவில் ஐஸ்கிரீம் குச்சியில் எழுதிய திருக்குறளை காட்சிப்படுத்தினேன். பார்வையாளர்கள் பாராட்டினர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்