உள்ளூர் செய்திகள்

கேரளாவில் தாயின் டாக்டர் பட்டத்தை பெறவுள்ள யு.கே.ஜி., படிக்கும் மகள்

திருவனந்தபுரம்: மகப்பேறு அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்த தாயின் டாக்டர் பட்டத்தை யு.கே.ஜி. படிக்கும் மகளுக்கு வழங்க கேரள பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் செம்புக்கா அழகம்பள்ளியைச் சேர்ந்தவர் பிரியா. கணவர் பியூஸ் பால். பிரியா டாக்டர் பட்டம் பெற திருச்சூர் கிறிஸ்தவ கல்லூரியில் விலங்கியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு 2018 ஏப். 28-ல் தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார்.அவரது ஆய்வறிக்கைக்கு அதே ஆண்டு ஜூலை மாதம் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் ஒப்புதல் அளித்தது.இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான பிரியா பிரசவத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது இறந்தார். டாக்டர் பட்டம் என்பது பிரியாவின் நீண்ட நாள் கனவாக இருந்ததால் அவரது டாக்டர் பட்டத்தை மகளிடம் வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை கோழிக்கோடு பல்கலைக்கழக சிண்டிகேட் ஏற்றுக் கொண்டது.இதைத்தொடர்ந்து யு.கே.ஜி. படிக்கும் அவரது மகள் ஆன்ட்ரியா, டாக்டர் பட்டத்தை பெற உள்ளார். இதற்கு பாராட்டு தெரிவித்து கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது:தாயின் நீண்ட நாள் ஆராய்ச்சி கனவுக்கான பட்டத்தை அவரது மகள் ஆன்ட்ரியா பெறப் போகிறார் என்பது நமக்கு என்றென்றும் மறக்க முடியாத நினைவாக இருக்கும். பிரியா இல்லாத நேரத்தில் அவரது முயற்சிகள் மற்றும் அற்புதமான சாதனைகளுக்கு வணக்கம் செலுத்துவோம்.இந்த விவகாரத்தில் உரிய முடிவை எடுத்த கோழிக்கோடு பல்கலைக்கழக சிண்டிகேட் பாராட்டப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்