மதுரை சிறையில் பட்டம் பெற்றதோடு தொழில் முனைவோரான முன்னாள் கைதி
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கே.கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சாமிவேல் 48, கொலை வழக்கில் 16 ஆண்டுகள் மதுரை மத்திய சிறையில் சிறைவாசம் அனுபவித்த நிலையில் அங்கேயே படித்து பட்டம் பெற்றதோடு தொழில் பழகி தொழில் முனைவோராகி பரமக்குடியில் டெய்லர் கடை திறந்துள்ள சம்பம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.பரமக்குடி அருகே கே.கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிவேல் 48. இவரது 32 வது வயதில் 2007ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு டிச.,18ல் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.அப்போது 9ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத இவர் சிறையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.பின் இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலையில் பி.ஏ., வரலாறு படித்து முதல் வகுப்பில் சிறையிலேயே பட்டம் பெற்றார். அதன் பின் 2013ம் ஆண்டில் சிறையில் இருந்தபடி நவீன மாடலிங் முறையில் டெய்லரிங் கற்று அதில் 2016 ல் சான்றிதழ் படிப்பு முடித்தார். நன்னடத்தை காரணமாக கடந்த மாதம் விடுதலையானார். பரமக்குடி பாம்பு விழுந்தான் விலக்கு ரோட்டில் &'மென்ஸ் பார்க்&' என்ற பெயரில் புதிய தையலகத்தை துவக்கி உள்ளார். நேற்று இதனை சிறைத்துறை டி.ஐ.ஜி., பழனி, கண்காணிப்பாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.சாமிவேல் கூறியதாவது: சந்தர்ப்ப சூழ்நிலையால் சிறைக்கு சென்ற நான் அங்கு தொடர்ந்து படித்து பட்டம் பெற்றேன். அதோடு தையல் கற்றேன். எனக்கு மனைவி பகவதி, மகள் பிரதீபா, மகன் பிரபாகரன் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. தற்போது தொண்டு நிறுவன உதவியுடன் அரசு ஒரு தையல் இயந்திரம் வழங்கி உள்ளது. சிறையில் எனது தவறை உணர்ந்து புது வாழ்க்கையை துவங்கும் நோக்கில் இந்த தையல் கடையை திறந்துள்ளேன். பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.டி.ஐ.ஜி., பழனி கூறியதாவது: எங்கள் சிறை இல்ல வாசியாக இருந்து தன்னை செதுக்கிக் கொண்டு தொழில் தொடங்குவதை குறிக்கோளாக ஏற்று தையல் கற்றுள்ளார். சிறையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ரெடிமேட் ஆடை தைக்கும் பகுதியில் பொறுப்பாளராக இருந்துள்ளார்.தற்போது தன்னை செம்மைப்படுத்திக் கொள்ளும் நோக்கில் கடை திறந்துள்ளார். சூழ்நிலைகளின் காரணமாக சிறை சென்று விடுதலை பெற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக சாமிவேல் திகழ்கிறார் என்றார்.விழாவில் பரமக்குடி நகராட்சி தலைவர் சேது கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.