பாடத்திட்ட குழு சீரமைப்பு பணி துவக்கம் பல்கலையில் செயல்பாடுகள் மும்முரம்
கோவை: பாரதியார் பல்கலையில் பாடத்திட்டங்கள் சீரமைப்புக்கான முதற்கட்டப் பணிகள் துவக்கப்பட்டுள்ளது என பதிவாளர் (பொறுப்பு) ரூபா குணசீலன் தெரிவித்தார்.பல்கலையில் ஆண்டுதோறும் பாடத்திட்ட குழுக்கள் கூடி, அப்போதைய வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படும். அதன்படி, பாரதியார் பல்கலை, தன்னாட்சி கல்லுாரிகள், அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளில், 100க்கும் மேற்பட்ட பாடத்திட்ட குழுக்கள் உள்ளன. பாடத்திட்ட குழுக்கள், மூன்றாண்டுக்கு ஒரு முறை, பாடத்திட்டங்கள் ஆய்வு செய்து மாற்றங்கள் ஏற்படுத்தும். அதேசமயம், ஆண்டுதோறும் மாற்றங்கள் தேவையா என்பதையும் ஆய்வு செய்து, இருப்பின் மாற்றிக்கொள்ள இயலும்.அதன்படி, பாரதியார் பல்கலையில் 2024-25ம் கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள, குழுக்கள் சீரமைப்பு பணிகள் முதற்கட்டமாக நடக்கிறது. இக்குழுக்களில், மூன்றாண்டுகள் தொடர்ந்து உறுப்பினர்களாக உள்ளவர்கள் மாற்றப்பட்டு, புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.இதுகுறித்து, பாரதியார் பல்கலை பதிவாளர் (பொறுப்பு) ரூபா குணசீலன் கூறுகையில், பாடத்திட்ட குழுக்களில் மூன்றாண்டுகள் காலம் முடிந்த உறுப்பினர்களை மாற்றி, புதிய உறுப்பினர்கள் நியமிக்கும் பணி நடந்து வருகின்றன. தொடர்ந்து, ஒவ்வொரு பாடங்களிலும் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து, தற்போதைய தொழில்நுட்பங்கள், வளர்ச்சிகள் இதில் சேர்க்கப்படும். கலை, அறிவியல் மாணவர்களும் அனைத்து தொழில்நுட்பம் சார்ந்து அறிந்துகொள்ளும் வகையில் தான் பாடத்திட்டங்களை மேம்படுத்தி வருகிறோம் என்றார்.