மயிலம் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் நவீன கருவியை கண்டறிந்து சாதனை
விழுப்புரம்: மயிலம் பொறியியல் கல்லுாரி மாணவர்கள், காட்டு விலங்குகளிடம் இருந்து விளை நிலங்களை பாதுகாக்க நவீன கருவியை கண்டுபிடித்து சாதித்துள்ளனர்.மயிலம் பொறியியல் கல்லுாரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை 4ம் ஆண்டு மாணவர்கள் கிருஷ்ணகோவிந்தன், ராஜேந்திர பிரசாத், கலையரசன், மிலன்குமார் ஆகியோர் பயில்கின்றனர்.இவர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் வழிகாட்டுதலின் பேரில், விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டு விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் சூரிய ஒளியில் இயங்கும் நவீன கருவி ஒன்றை வடிவமைத்து அசத்தியுள்ளனர்.இது பற்றி நவீன கருவியை கண்டுபிடித்த மாணவர்கள் கூறியதாவது:ஒரு பயிரை நடவு செய்து சாகுபடி செய்து மகசூல் பெற விவசாயிகள் படாதபாடுகின்றனர். இயற்கை இடர்பாடுகள் மட்டுமின்றி காட்டு விலங்குகளால் பயிர்கள் சேதமாக விளைச்சல் பாதிக்கிறது. குறிப்பாக, யானைகள், காட்டு பன்றிகள், எருமைகள், குரங்குகள், பறவைகளால் விளை நிலங்கள் தாக்கப்படுவது நடக்கிறது.இதனால் பல மாதங்கள் பாடுபட்டு வளர்த்த பயிர்கள் நொடி பொழுதில் அழிகிறது.இதற்கு தீர்வு காண, விலங்குளை விரட்டக்கூடிய சூரிய ஒளியில் இயங்கும் நவீன கருவியை கண்டுபிடித்து அதை காட்டு பன்றிகளின் அட்டகாசம் அதிகமுள்ள விளைநிலங்களில் அமைத்து சோதித்து பார்த்து வெற்றியை கண்டுள்ளதாக தெரிவித்தனர்.இந்த கருவியின் செயல்விளக்க நிகழ்ச்சியில், கல்லுாரி இயக்குனர் செந்தில், முதல்வர் ராஜப்பன், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் முரளி கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் கலைவாணி ஆகியோர் பங்கேற்றனர்.மாணவர்களின் கண்டுபிடிப்பை ஊக்கப்படுத்தும் வகையில், மணக்குள விநாயகர் மற்றும் மயிலம் சுப்பிரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன், கல்விக்குழுமம் செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜப்பன் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.