உள்ளூர் செய்திகள்

மருத்துவ கமிஷன் தேர்வு எழுத உக்ரைனில் படித்தவரை அனுமதிக்க உத்தரவு

மதுரை: உக்ரைனில் எம்.பி.பி.எஸ்., தேர்ச்சியடைந்த தமிழகத்தை சேர்ந்த நபரை, இந்தியாவில் டாக்டர் தொழில் செய்ய அனுமதிப்பதற்கான தகுதித்தேர்வில் பங்கேற்க ஹால் டிக்கெட் வழங்க தேசிய மருத்துவ கமிஷனுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மணிகண்டன் தாக்கல் செய்த மனு:உக்ரைன் மருத்துவ கல்லுாரியில், ஆறு ஆண்டுகள் எம்.பி.பி.எஸ்., படிப்பை 2023 ஜூன் 21ல் முடித்தேன். இந்தியாவில் டாக்டர் தொழில் செய்ய அனுமதிக்க இளங்கலை மருத்துவ பட்டதாரி கல்வி வாரியம் நடத்தும் தகுதித்தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்தேன்.எம்.பி.பி.எஸ்., சேர்வதற்கான குறைந்தபட்ச வயதை பூர்த்தி செய்யவில்லை. 17 வயது நிறைவடைய 11 நாட்கள் குறைவாக இருந்தது' என தேசிய மருத்துவ கமிஷன் நிராகரித்தது. அதை ரத்து செய்து ஹால் டிக்கெட் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: இவ்வழக்கு மாறுபட்டது. மனுதாரர் ஏற்கனவே எம்.பி.பி.எஸ்., முடித்துள்ளார். புதிதாக எம்.பி.பி.எஸ்., சேர்க்கை கோரவில்லை. 'ஸ்கிரீனிங் தேர்வு' எழுத விரும்புகிறார். மனுதாரர் நீட் எழுதாமல் வெளிநாட்டு கல்லுாரியில் சேர்ந்ததை சுட்டிக்காட்டி, முதலில் எதிர்த்த போதிலும், அதை பின்னர் தேசிய மருத்துவ கமிஷன் தரப்பு வலியுறுத்தவில்லை.உண்மையில், 2019 - 20 கல்வியாண்டிலிருந்து மட்டுமே வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கும் நீட் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தன்னை போலவே 2017ல் உக்ரைனில் அதே பல்கலையில் சேர்ந்த 2 பேருக்கு 'ஸ்கிரீனிங்' தேர்வில் பங்கேற்க அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டியது. வெவ்வேறு அளவுகோலை ஏற்றுக்கொள்ளக்கூடாது.மனுதாரர் இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., படிக்க வேண்டும் எனில், நீட் எழுத வேண்டும். வயது தகுதியை பூர்த்தி செய்திருக்க வேண்டும். மனுதாரர் ஆறு ஆண்டுகள் படிப்பை முடித்துள்ளார். தற்போது அவருக்கு நிவாரணம் மறுக்கப்பட்டால், அவரை பாதிக்கும். அவரை நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.ஹால் டிக்கெட் வழங்க மற்றும் ஸ்கிரீனிங் தேர்வு நடைபெறும் போது மனுதாரர் பங்கேற்க தேசிய மருத்துவ கமிஷன் செயலர் அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்