உள்ளூர் செய்திகள்

அரசு கல்லுாரி கலந்தாய்வு அட்டவணையில் மாற்றம்; வணிகவியல் பாடங்கள் ஒருங்கிணைப்பு

கோவை : அரசு கல்லூரியில் வணிகவியல் பாடப் பிரிவு களுக்கு, தனித்தனியாக கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாற்றம் செய்யப்பட்டு புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பொது கலந்தாய்வு ஜூன் 10ம் தேதி முதல் நடக்கவுள்ளது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட கலந்தாய்வு அட்டவணையில், வணிகவியல் பாடப் பிரிவுகளில் உள்ள படிப்புகளுக்கு, வெவ்வேறு தேதிகளில் கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.இதனால், வெளிமாவட்டத்தில் இருந்து வரும் மாணவர்கள் 3 நாட்களுக்கும் மேலாக தங்கி, கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டிய சூழல் இருந்தது. இதுபோன்று பிரித்து நடத்தாமல், வணிகவியல் பாடங்களுக்கு ஒரேகட்டமாக கலந்தாய்வு நடத்தினால் மாணவர்கள், பெற்றோர் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்படும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து, கல்லூரி கவுன்சில் கூட்டப்பட்டு கலந்தாலோசித்து, வணிகவியல் பாடப் பிரிவுகளுக்கு ஒரே நாளில் கவுன்சிலிங் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, பி.காம், பி.காம் சி.ஏ., பி.காம் ஐ.பி., பி.எஸ்சி. கணினி அறிவியல், பி.எஸ்சி. ஐ.டி. ஆகிய பாடப் பிரிவுகளுக்கு ஜூன் 10ம் தேதியும், பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு 11ம் தேதியும், தாவரவியல், விலங்கியல், மண்ணியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு 12ம் தேதியும், பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன், சைக்காலஜி, புவியியல், அரசியல் அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு 13ம் தேதியும், புள்ளியியல், பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன், பாதுகாப்பியல், பொருளாதாரம் ஆகிய பாடப் பிரிவு களுக்கு 14ம் தேதியும், வரலாறு, சுற்றுலா மற்றும் மேலாண்மைத் துறை, தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு 15ம் தேதியும் கவுன்சிலிங் நடத்தப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்