மதுரையின் பாரம்பரிய விதைக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை!
மதுரை: மதுரையின் பாரம்பரிய விதைகளுக்கு புவிசார் குறியீடு பெறப்படும் என மதுரை காமராஜ் பல்கலை தொடர்பியல் துறை, தென்மாவட்ட இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நடந்த விதைத் திருவிழாவில் தெரிவிக்கப்பட்டது.பல்கலை இணைப் பேராசிரியர் மயில்வாகனன் துவக்கி வைத்தார். பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் ஜெயக்குமார், வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தலைமை வகித்தனர். மதுரை விவசாய கல்லுாரி பேராசிரியர்கள் சுஜாதா, ஆனந்தி, தொடர்பியல் துறைத்தலைவர் நாகரத்தினம் முன்னிலை வகித்தனர்.மரபார்ந்த விவசாயமும் சுற்றுச்சூழலும் குறித்து பேராசிரியர் கண்ணன், மரமும் மனிதனும் குறித்து இணைப் பேராசிரியர் ரமேஷ், உணவுக்காடு, பாரம்பரிய நெல் காட்சிப்படுத்துதல், தென்மாவட்ட சிறுதானியங்கள் குறித்து விவசாயிகள் சுந்தரேசன், மேனகா, புவனேஸ்வரி பூங்குழலி, பாமயன், ஈசன் முருகேசன், அழகேஸ்வரி பேசினர்.கூட்டமைப்பு தலைவர் காளிமுத்து பேசுகையில், மதுரையில் எட்டுநாழி, காரைக்கேணி கத்தரிக்காய், செங்கப்படை வரகு, எஸ்.சென்னம்பட்டி பாகற்காய் விதைகளை அக்கிராமத்தினரே பாதுகாக்கின்றனர். அவற்றை மீண்டும் மீண்டும் மறுஉற்பத்தி செய்கின்றனர். இவற்றை ஆவணப்படமாக தொகுத்துள்ளோம். தென்மாவட்ட இயற்கை விவசாய கூட்டமைப்பு சார்பில் பல்கலையுடன் இணைந்து இவற்றுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுப்போம் என்றார்.கூட்டமைப்பு செயலாளர் ரமேஷ் தொகுத்து வழங்கினார்.