கல்வி தொடர முடியாத மாணவர்களுக்கு வாய்ப்பு; இடைநின்றவர்களுக்கு ஆர்.டி.ஓ., அறிவுரை
குன்னுார்: சமூக பொருளாதார பாதிப்பால் கல்வி தொடர முடியாமல் இருக்கும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு மீண்டும் கல்விக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என குன்னுார் ஆர்.டி.ஓ., சங்கீதா தெரிவித்தார்.குன்னுார் அந்தோணியார் பள்ளியில் மாணவர்களுக்கான, நான் முதல்வன் உயர்வுக்கு படி என்ற உயிர் கல்வி வழிகாட்டி முகாம் நடந்தது.முகாமை துவக்கி வைத்த, குன்னுார் ஆர்.டி.ஓ., சங்கீதா பேசுகையில், சமூக மற்றும் பொருளாதார காரணங்களால் குழந்தைகளுக்கு கல்வி தடைபடகூடாது என்பதற்காக, இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக அளவில் பயனுள்ள பாதையை உருவாக்க, பள்ளியளவில், நான் முதல்வன் வழிகாட்டி நிகழ்ச்சி அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்து வருகிறது. அதில், பள்ளி முடித்து மாணவர்கள் தங்கள் விருப்பப்படி உயர்கல்வியை தேர்வு செய்யவும், சமூக பொருளாதார பாதிப்பால் கல்வி தொடர முடியாமல் இருக்கும் பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியருக்கு மீண்டும் கல்விக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.முகாமை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா பேசுகையில், இடைநின்ற மாணவ, மாணவியர்களை கண்டறிந்து, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தி கல்லுாரி அல்லது தொழில்நுட்ப கல்லுாரியில் சேர்த்து படிக்க உறுதி செய்யப்படும்.குன்னுாரில், 56 பேர்; கோத்தகிரியில் 59' பேர் என கல்வி இடைநின்ற மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று, உயர்கல்வி பயின்று வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும். விளையாட்டு உட்பட எந்தெந்த துறைகளில் ஆர்வம் உள்ளதோ அதனை தேர்வு செய்து அதில் பங்கேற்க மாணவர்கள் முன்வர வேண்டும் என்றார்.மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ் (பொ), பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை துறை அலுவலர் சுரேஷ் கண்ணன், சமூக நலத்துறை அலுவலர் பிரவீனா தேவி, ஊட்டி அரசு கலைக்கல்லுாரி முதல்வர் ராஜலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.