ஐ.டி.ஐ., முடித்தோருக்கு வேலை தர மின் வாரியம் முன் உண்ணாவிரதம்
சென்னை: ஐ.டி.ஐ., படித்து வேலையில்லாத 1,000க்கும் மேற்பட்டோருக்கு தமிழக மின் வாரியத்தில் வேலை வழங்கக்கோரி, சென்னை அண்ணா சாலை மின் வாரிய தலைமை அலுவலகம் அருகில், நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.இந்த போராட்டத்தை துவக்கி வைத்த, மின் வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்க பொதுச்செயலர் மு.சுப்ரமணியன் கூறியதாவது:கள உதவியாளர் பதவிக்கான தகுதி, ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும் என்பதாகும். ஏனெனில், மின்சாரத்தை வினியோகிக்கும் பணிக்கு தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும் என்பதே காரணம். ஆனால், ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்தது உட்பட பல்வேறு காரணங்களால், 1992ல் இருந்து, 52,000 பேர் கள உதவியாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அதில், 9,000 பேர் மட்டுமே ஐ.டி.ஐ., முடித்தவர்கள்.இதனால், பல ஊழியர்கள் அடிக்கடி மின் விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, ஐ.டி.ஐ., முடித்த 8,000 நபர்களை தேர்வு செய்ய, தமிழக அரசிடம் வாரியம் அனுமதி கேட்டுள்ளது. இதற்கு அனுமதி தராமல் தாமதம் செய்யப்பட்டு வருகிறது.