உள்ளூர் செய்திகள்

அணு ஆராய்ச்சி நிலையங்களில் அதிக வேலை வாய்ப்பு: அதிகாரி தகவல்

மேட்டுப்பாளையம் : அணு ஆராய்ச்சி நிலையங்களில், அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன, என, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர் ஆதிமூல கிருஷ்ணன் தெரிவித்தார்.கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் கல்லூரியில், பத்தாவது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரியின் சேர்மன் தர்மலிங்கம் தலைமை வகித்தார். தாளாளர் கார்த்திகேயன் விழாவை துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஜெயபிரகாஷ் வரவேற்றார்.கல்லூரி செயலாளர் புனிதவள்ளி, தலைமை செயல் அதிகாரி பிரசன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர் ஆதிமூல கிருஷ்ணன், மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:மனிதன் வாழ காற்று, நீர், மின்சாரம் ஆகியவை அவசியமாகும்.தென்னிந்தியாவின் கடலோரப் பகுதிகளில், யுரேனியம் மற்றும் தோரியம் இருப்புகளை பயன்படுத்துவதன் வாயிலாக, அணுசக்தி திட்டம் உருவாக்கப்பட்டது.உலகளாவிய யுரேனியம் இருப்புகளில் இந்தியாவில், 23 சதவீதமும், தோரியம் இருப்புகளில் 25 சதவீதமும் உள்ளது. சென்னை கல்பாக்கத்தில் உள்ள பாரதிய நபிகியா வித்யூத் நிகாம் லிமிடெட் மையம் பயன்பாடு அறிவியல், புற்றுநோய் பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது. அணு ஆராய்ச்சி மையங்களில், வேலை வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன.எனவே இன்றைய இளம் பட்டதாரி மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்கு தன்னை முழு அளவில் ஈடுபடுத்திக் கொண்டு, அதில் வெற்றி பெற்று, இந்த துறையில் பணிகளில் சேர்ந்து பயன்பெற வேண்டும். மேலும் இத்துறையில் நீங்கள் சாதனைகள் அதிகம் படைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் சிவில், கம்ப்யூட்டர் அறிவியல், மெக்கானிக்கல் உள்பட ஆறு துறைகளைச் சேர்ந்த, 276 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. கல்லூரி மற்றும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்