மாணவி புகார் மீது நடவடிக்கை அண்ணா பல்கலை பதிவாளர் தகவல்
சென்னை: சென்னை அண்ணா பல்கலை மாணவி அளித்த, பாலியல் சீண்டல் புகாரின் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என பல்கலை பதிவாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:சென்னை, அண்ணா பல்கலை, கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி மாணவி ஒருவர், தன் ஆண் நண்பருடன், கல்லுாரி வளாகத்தின் பின்புறம் பேசிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத இருவர், தன் நண்பரை தாக்கி, தன்னிடம் பாலியல் வன்கொடுமைக்கு முயன்றதாக, நேற்று முன்தினம் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்துகின்றனர். கோட்டூர்புரம் காவல் உதவி ஆணையர் தலைமையில், மகளிர் காவல் நிலையக் குழுவினர் வழக்கை விசாரிக்கின்றனர். இது குறித்து, அண்ணா பல்கலை உள் புகார் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை நடக்கிறது.காவல் துறையினர் விசாரணைக்கு, முழு ஒத்துழைப்பு வழங்கும்படி, உயர்கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி, பல்கலை நிர்வாகம் காவல் துறையினர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறது.பல்கலை வளாகத்தில், பாதுகாப்பு பணியாளர்கள், எப்போதும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனினும், இந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க, போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அண்ணா பல்கலையில், மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மனம் திறந்த மாணவர்கள்அண்ணா பல்கலை விடுதி மாணவர்கள் கூறியதாவது:கோட்டூர்புரம் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், கிண்டி சென்னை பல்கலையில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர், கிண்டி சர்தார் படேல் சாலையில் உள்ள, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் வழியாக, அண்ணா பல்கலை உட்புறம் வழியே செல்கின்றனர். பலர் அண்ணா பல்கலை வாகன நிறுத்தங்களில், தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, கோட்டூர்புரம் பகுதிக்கு செல்கின்றனர். இதனால், பல்கலை பேராசிரியர்கள் வாகனம் நிறுத்த முடியாமல், ஏற்கனவே பிரச்னை ஏற்பட்டது. சில விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அண்ணா பல்கலையின் முதன்மை வாயிலில் மட்டும், வந்து செல்வோரை காவலர்கள் விசாரிக்கின்றனர். கோட்டூர்புரம் பகுதி வாயிலில், பாதுகாப்பு இல்லை. இதனால், வெளியாட்கள் வந்து செல்வது இயல்பாக உள்ளது. பல்கலை வளாகத்தில், சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை, இரவில் அணைந்து விடுகின்றன. பல இடங்களில், சிசிடிவி கேமராக்கள் இல்லை. இந்த பகுதிகளில், மாணவர்களை குறிவைத்து, மர்ம நபர்கள் மொபைல் போன், பர்ஸ், நகை உள்ளிட்டவற்றை பறித்துச் செல்கின்றனர். இது குறித்து புகார் அளித்தால், அப்பகுதிகளுக்கு ஏன் செல்கிறீர்கள்? என, மாணவர் பக்கம் விசாரணை திரும்புவதால், யாரும் புகார் அளிப்பதில்லை. தற்போது பாலியல் சம்பவம் நடந்துள்ளதுபோல், ஏற்கனவே, பலமுறை நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை புகார் அளிக்க விடாமல், பல்கலை நிர்வாகம் மனநல ஆலோசனை வழங்கியது. தற்போது நடந்த சம்பவம் குறித்து, மறுநாள்தான் எங்களுக்கே தெரிந்தது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, காவலை பலப்படுத்தி, வெளியாட்கள் வருவதைக் கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது:இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தனிப்பட்ட ஒரு மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்தை, அரசியல் ஆக்க விரும்புகிறவர்கள், கடந்த ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், அன்றைய ஆட்சியாளர்களின் அழுத்தத்தால், பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் புகார் அளிக்கக்கூட பயந்தனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தி.மு.க., ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. வெகு விரைவில் குற்றவாளிகள், சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.இவ்வாறு கூறினார்.