உள்ளூர் செய்திகள்

மாணவி அடையாளத்தை வெளியிட்ட அதிகாரி சஸ்பெண்ட் : அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பெயர், அடையாளத்துடன் எப்.ஐ.ஆர்., ஐவெளியிட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடர் குற்றவாளி ஒருவனால், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியான செய்தியால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாக, அந்த மாணவியின் பெயர், ஊர் உள்ளிட்ட அடையாளங்களுடன் கூடிய வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியில் கசியவிடப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. போலீசாரின் இந்த பொறுப்பற்ற செயல் கண்டிக்கத்தக்கது.மாணவியை இரக்கமற்ற மனித மிருகம் உடல்ரீதியாக வன்கொடுமை செய்தால், போலீசாரோ மனரீதியாக வன்கொடுமை செய்திருக்கிறது. பாலியல் வன்கொடுமை சார்ந்த வழக்குகளில் எத்தகைய நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்ற அடிப்படைக் கூட தெரியாத அதிகாரிகளால் கையாளப்படும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்குமா? என்ற ஐயத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தியிருக்கிறது.பாலியல் வன்கொடுமை வழக்கில் இருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், கைது செய்யப்பட்ட ஒருவரைத் தவிர இன்னொருவர் யார்? என்று தெரியவில்லை. அவரை பாதுகாக்கும் நோக்கத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணை மனதளவில் சோர்ந்து போகச் செய்யும் நோக்குடன் தான் போலீசார் இவ்வாறு செய்கிறதா? என்ற ஐயம் எழுகிறது.பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளங்களை முதல் தகவல் அறிக்கை வாயிலாக வெளியிட்ட போலீஸ் அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து சட்டப்படி தண்டனைப் பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்