எம்.பி.பி.எஸ்., சீட் மோசடி வழக்கு கிடப்பில் போடப்பட்ட அவலம்
புதுச்சேரி: என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., சீட் பெற போலி ஆவணங்கள் சமர்ப்பித்த வழக்கில் ஏஜென்ட்களை கைது செய்ய முடியாமல் வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் அரசு மருத்துவ கல்லுாரி, 3 சுயநிதி மருத்துவ கல்லுாரி எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில், வெளிநாடு வாழ் இந்தியவர்கள் (என்.ஆர்.ஐ.,) மற்றும் என்.ஆர்.ஐ., ஸ்பான்சர் பிரிவில் 15 சதவீதம் ஒதுக்கீடு அடிப்படையில் 116 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இந்த எம்.பி.பி.எஸ்., இடங்களில் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர் ஸ்பான்சர் ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்று படிக்கலாம்.நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற பலர், ஏஜென்ட்கள் மூலம் போலியான வெளிநாட்டு துாதர ஆவணங்கள் கொடுத்து என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டு இடங்களை பெற்று வந்தனர்.கடந்த செப்., மாதம் நடந்த மருத்துவ படிப்பு சேர்க்கையில் கொடுத்த என்.ஆர்.ஐ., இடங்களுக்கான ஆவணங்களை பரிசோதித்தபோது, 74 மாணவர்களின் ஆவணங்கள் போலியாக சமர்ப்பித்துள்ளது தெரியவந்தது. இதனால் 74 மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட எம்.பி.பி.எஸ்., இடங்கள் ரத்து செய்யப்பட்டது. சென்டாக் ஒருங்கிணைப்பாளர் இது தொடர்பாக கடந்த நவ., மாதம் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப் பதிந்து போலி ஆவணம் சமர்ப்பித்த மாணவர்களை வரவழைத்து விசாரணை துவக்கினர். போலி ஆவணம் வழங்கிய ஏஜென்ட்டுகள் ஆந்திரா குண்டூர் மெட்டி சுப்பாராவ், தேனி மாவட்டம் பூமிநாதன் என்கின்ற ஜேம்ஸ், செல்வகுமார், கார்லோஸ் சாஜிவ், வசந்த் என்கின்ற விநாயகம், உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்த மோசடியில் கன்னியாக்குமரி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. 4 குழுக்களாக பிரிந்து கைது நடவடிக்கையில் இறங்கினர்.அதற்கு முன்னதாக ஏஜென்ட்கள் 6 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்றனர். இதனால் கடந்த 2 மாதம் ஆகியும், கைது செய்யப்படாமல் உள்ள ஏஜென்ட்களை கைது செய்ய முடியாமல், என்.ஆர்.ஐ., எம்.பி.பி.எஸ்., சீட் மோசடி வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது.