சத்தீஷ்கர் விஷவாயு விவகாரம்: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
சத்தீஷ்கர்: சத்தீஷ்கர் மாநிலம் பலோடா பஜார் மாவட்டத்தில் அரசு பள்ளி அருகே உள்ள சிமெண்ட் தொழிற்சாலையிலிருந்து கடந்த ஜனவரி 22 அன்று வெளியான விஷவாயுவை சுவாசித்ததால் 38 மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த சம்பவத்தை தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. ஊடகச் செய்தியின்படி இந்த மாணவர்கள் மூச்சுத்திணறல், வாந்தி, சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து சத்தீஷ்கர் அரசின் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள மனித உரிமை ஆணையம் நான்கு வாரத்திற்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் உடல்நிலை குறித்தும் மக்களின் சுகாதாரத்தைப் பாதிக்கும் இந்தப் பிரச்சனையைக் கையாள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை கோரப்பட்டுள்ளது.