உள்ளூர் செய்திகள்

சம்பளம் கூட தர முடியாமல் கால்நடை மருத்துவ கல்லுாரி தள்ளாடுது

புதுச்சேரி: ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவ கல்லுாரி, நிர்வாக சிக்கலில் சிக்கி சம்பளம் கூட போட முடியாமல் தள்ளாடுகிறது.இந்த நிறுவனத்தை திட்டமில்லா செலவினங்களின் கீழ் கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.புதுச்சேரி ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 1994ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. புதுச்சேரி அரசின் முழு நிதியுதவியுடன் இயங்கும் கல்லுாரியாகும். இந்நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ச்சியான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வுகாண எந்த முயற்சியும் இதுவரை எடுக்கப்படவில்லை.தொடர்ந்து, ஊழியர்களுக்கு சம்பளம் காலம் கடந்தே வழங்கப்படுவதால் பேராசிரியர்கள், ஊழியர்கள் நிலைகுலைந்து போய் உள்ளனர். தற்போதுகூட மூன்று மாத சம்பளம் நிலுவையில் உள்ளது. இதனால் பல ஊழியர்கள் தாங்கள் வாங்கிய கடனை உரிய காலத்தில் கட்டமுடியாமல் மன உளைச்சலில் உள்ளனர்.பல ஆசிரியர்கள் தங்கள் முந்தைய நிறுவனங்களிலிருந்து ஓய்வூதிய நிதியை இந்த நிறுவன ஓய்வூதியக் கணக்கிற்கு மாற்றியுள்ளனர். இருப்பினும் ஓய்வூதியம் பெறுவதில் பல சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். ஆரம்பகால உறுதிமொழிகள் முறையாக செயல்படுத்தப்படாததால், ஓய்வூதியர்களின் பல நீதிமன்ற வழக்குகளுடன் இந்நிறுவனம் போராடி வருகிறது.நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக சமீபத்தில் ஓய்வூதியம் வழங்குவதில் சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.நிறுவன முதல்வரை மற்ற நிறுவனங்களிலிருந்து நியமிப்பது, நிதி நெருக்கடியை மேலும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு மூன்று ஆண்டு நியமனத்திற்கும் கூடுதலாக இரண்டு கோடி ரூபாயை விடுப்பு சம்பள பங்களிப்பு, டெபுடேஷன் போன்றவற்றை இந்நிறுவனம் செலுத்த வேண்டும். இதற்கு பதிலாக இக்கல்லுாரியின் அனுபவம்மிக்க மூத்த பேராசிரியர்களை நியமமிப்பதின் மூலம் ஓரளவு நிதிச்சுமையைக் குறைக்கலாம்.வகுப்பறைகள், ஆய்வகங்கள், விடுதிகள் போன்ற எந்த உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தாமல் மாணவர்களின் சேர்க்கை திறனை 30-லிருந்து 100 இடங்களாக நிறுவனம் அதிகரித்துள்ளது. இதனால் போதுமான விடுதி வசதி இல்லாமல் மாணவ, மாணவியர் வெளியே தங்குவது, பல சமூக பிரச்னைகளுக்கு வழிவகுத்துள்ளது.முதல் 20 ஆண்டுகளாக இத்திய கால்நடை மருத்துவக் கவுன்சிலின் மாதிரி கால்நடை மருத்துவக் கல்லுாரியாக அங்கீகாரம் பெற்று 30 ஆண்டுகளை இந்நிறுவனம் நிறைவு செய்துள்ளது. இந்த அங்கீகாரத்தை தக்க வைக்க திட்டமில்லா செலவினங்களின் கீழ் கொண்டுவருவது அல்லது புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக மாற்றுவது நிரந்தர தீர்வாக அமையலாம் என்பது பல ஊழியர்களின் ஒட்டுமொத்தமாக எண்ணமாகவும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்