உள்ளூர் செய்திகள்

உண்டு உறைவிடப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம்

கோவை: கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் செயல்படும் உண்டு உறைவிடப் பள்ளிகளில், 2025-26ம் கல்வியாண்டிற்கான 1 முதல் 8ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.தமிழகத்தில் 11 மாவட்டங்களில், 15 உண்டு உறைவிடப் பள்ளிகளும், 5 மாவட்டங்களில் 5 விடுதியும் இயங்கி வருகிறது. கோவை மாவட்டத்திலுள்ள வால்பாறை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில், 100 மாணவ மாணவிகள் சேர்ந்து கல்வி பயிலலாம்.இங்கு, 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, இலவச தங்குமிட வசதி உள்ளது. ஒண்டிப்புதூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கும், மற்றொரு பள்ளியில் 50 மாணவர்களுக்கு மட்டுமே சேர்க்கை வழங்கப்படுகிறது.தற்போது, இந்த இரு பள்ளிகளிலும், விடுதியிலும் சேர்க்கை தொடங்கியுள்ளது. ஒண்டிப்புதூர் பள்ளியில் 12; வால்பாறையில், விடுதியில் 5, பள்ளியில் 20 இடங்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் வராத, 7 மாணவர்களின் இடங்கள் சேர்த்து கூடுதலாக காலியாகியுள்ளது.இந்த பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை இலவசமாக கல்வி பயிலலாம். மாதம் ரூ.200 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:பழங்குடியினர், பின்தங்கியோர், பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்த மாணவர்கள் இங்கு சேரலாம். தற்போது, வால்பாறை பகுதியில் உள்ள வில்லோனி, அக்காமலை, வெள்ளிமலை, சோலையாறு, கருமலை போன்ற இடங்களில், வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பிறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, பெற்றோர் ஆதார் மற்றும் புகைப்படங்களுடன் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்