மருத்துவக் கல்லுாரி இட ஒதுக்கீட்டில் தி.மு.க., இரட்டை வேடம்: அன்பழகன்
புதுச்சேரி: மருத்துவக் கல்லுாரி இட ஒதுக்கீடு பிரச்னையில் தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது என, அ.தி.மு.க., குற்றம்சாட்டியுள்ளது.அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது:தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் அரசின் இட ஒதுக்கீடாக 50 சதவீத இடங்களை அரசு பெறுவதில் தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது.கடந்த தி.மு.க., - காங்., கூட்டணி ஆட்சியிலும், தற்போது பா.ஜ., என்.ஆர்.காங்., ஆட்சியிலும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் 50 சதவீதம் இடங்களை அரசு பெறாமல் ஆண்டுதோறும் 36 சதவீத இடங்களை மட்டுமே பெற்று புதுச்சேரி மாணவர்களுக்கு துரோகம் இழைத்து வருகின்றன.இது சம்பந்தமாக சட்டசபையில் எதிர்க்கட்சியான தி.மு.க., 50 சதவீத இடங்களை பெற வலியுறுத்தி கேள்வியோ, விவாதமோ, கவன ஈர்ப்பு தீர்மானமோ எதையும் செய்யவில்லை.தங்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் புதுச்சேரி அரசு தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத இடங்களை அரசு இட ஒதுக்கீடாக பெறவேண்டும் என, தீர்மானம் போட்டுள்ளது மக்களை ஏமாற்றும் செயல்.லஞ்ச ஒழிப்புதுறை எஸ்.பி., அரசு மருத்துவமனை நோயாளிகளிடம், ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்துள்ளார். இதுபோல், அவர் காவல்துறை, பத்திரப்பதிவுத் துறை, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் லஞ்சம் வாங்குபவர்களை எச்சரிக்க வேண்டும்' என்றார்.