இயற்கை மாற்றங்களை துல்லியமாக படம் பிடிக்கும் நிசார் விண்ணில் பாய்ந்தது
சென்னை: இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் நாசா இணைந்து உருவாக்கிய, நிசார் செயற்கைக்கோளை வெற்றிகரமாக சூரிய ஒத்திசைவு சுற்றுவட்டப் பாதையில், ஜி.எஸ்.எல்.வி., - எப் 16 ராக்கெட் நிலைநிறுத்தியது.நம் நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு, புவி கண்காணிப்பு போன்றவற்றுக்கான செயற்கைக்கோளை உருவாக்கி, பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட் உதவியுடன், இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தி வருகிறது.முதல் முறையாக இஸ்ரோவும், நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமும் இணைந்து, நிசார் என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளன.இதற்கான ஒப்பந்தம், 2014 செப்., 30ல் கையெழுத்தானது; திட்டச் செலவு 12,750 கோடி ரூபாய். நிசார் செயற்கைக்கோளை, 2023ல் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், செயற்கைக்கோளை உருவாக்குவதில் ஏற்பட்ட தாமதத்தால், திட்டம் இந்தாண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.அதன்படி, மொத்தம் 2,393 கிலோ எடை உடைய நிசார் செயற்கைக்கோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி., - எப் 16 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து நேற்று மாலை 5:40 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.பூமியில் இருந்து புறப்பட்ட, 18 நிமிடங்கள், 54வது வினாடியில், திட்டமிடப்பட்ட 745 கி.மீ., துாரம் உள்ள சூரிய ஒத்திசைவு சுற்று வட்டப் பாதையில், நிசார் செயற்கைக்கோளை வெற்றிகரமாக ராக்கெட் நிலைநிறுத்தியது.பூமியில் நிகழக் கூடிய சிறிய அளவிலானஇயற்கை மாற்றங்களையும் ஆராய்வதற்கு அனுப்பப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், 12 நாட்களுக்கு ஒரு முறை பூமி முழுவதையும் அங்குலம் அங்குலமாக படம் பிடித்து, இஸ்ரோ மற்றும் நாசாவின் கட்டுப்பாட்டு மையங்களுக்கு அனுப்பும். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை அடுத்து, சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்த சக விஞ்ஞானிகளுக்கு, இஸ்ரோ தலைவர் நாராயணன் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.இஸ்ரோ நேற்று விண்ணுக்கு அனுப்பிய ஜி.எஸ்.எல்.வி., - எப் 16 ராக்கெட், சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளங்களில் இருந்து ஏவப்பட்ட 102வது ராக்கெட்; ஜி.எஸ்.எல்.வி., வகையில் 18வது ராக்கெட்.எரிபொருள், செயற்கைக்கோள் என, மொத்தம் 420.50 டன் எடையை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி., - எப் 16 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.