ஐந்து மாதமாக சம்பளம் இல்லை அரசு கல்லுாரி ஊழியர்கள் அவதி
சென்னை: பல்கலைகளின் உறுப்பு கல்லுாரிகளாக இருந்து அரசு கல்லுாரியாக மாற்றப்பட்டவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, கடந்த ஐந்து மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால், அவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.மாநில பல்கலைகளின் உறுப்பு கல்லுாரிகளாக இருந்த 41 கல்லுாரிகள், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளாக மாற்றப்பட்டுள்ளன. உறுப்பு கல்லுாரியாக இருந்த போது, கடந்த 15 ஆண்டுகளாக, தொகுப்பூதியத்தில் பணிபுரிந்தோருக்கு, பல்கலை நிர்வாகங்கள், ஐந்தாண்டுக்கு ஒருமுறை, ஊதியத்தை உயர்த்தி வழங்கின. மேலும், 12 மாதங்களுக்கும் ஊதியம் வழங்கப்பட்டது.அவை, அரசு கல்லுாரியாக்கப்பட்ட பின், இரண்டு முறை, அலுவலகப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. ஆனால், தொகுப்பூதிய பணியாளர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்கப்படாததுடன், 11 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது.அதுவும், கடந்த ஏப்., முதல் இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை. அவற்றை வழங்க வேண்டும். ஊதிய உயர்வு மற்றும் 12 மாதங்களுக்கான சம்பளத்தை வழங்க வேண்டும் என, தொகுப்பூதிய பணியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.