உள்ளூர் செய்திகள்

சென்னை ஐ.ஐ.டி.,க்கு நிலம் வழங்கும் ஆரோவில் அறக்கட்டளை திட்டத்திற்கு எதிர்ப்பு

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,க்கு 100 ஏக்கர் அன்னபூர்ணா விவசாய பண்ணை நிலத்தை வழங்க, ஆரோவில் வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் சர்ச்சை எழுந்துள்ளது.புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ., துாரத்தில் சர்வதேச நகரமான ஆரோவில் உள்ளது. இங்கு அன்னையின் கனவுபடி ஆரோவில் மாத்ரி மந்திர் உருவாக்கப்பட்டது. பல்வேறு நாடுகளை சேர்ந்த, 2,500க்கும் மேற்பட்டோர் இனம், மொழி, அரசியல் பாகுபாடின்றி ஆரோவில்லில் வசிக்கின்றனர்.தவறு நடப்பதாக புகார்ஆரோவில் அறக்கட்டளை செயலராக நியமிக்கப்பட்ட ஜெயந்தி ரவி தலைமையிலான நிர்வாகம், 2021ல் இருந்து அன்னையின் கனவை நிறைவேற்றுவதற்கு பல்வேறு புதிய திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.முதற்கட்ட பணியாக, மாத்ரி மந்திரை சுற்றி 4 கி.மீ., கிரவுன் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டது. தொடர்ந்து, மாத்ரி மந்திர் வளாகத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும்படி ஏரி அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.இதற்கிடையில், சென்னை ஐ.ஐ.டி.,யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, பசுமை தொழில்நுட்ப ஆராய்ச்சி மேம்பாட்டில் இணைந்து ஆரோவில் செயல்பட உள்ளது.இதற்காக ஆரோவில் அறக்கட்டளை, சென்னை ஐ.ஐ.டி., நிறுவனத்திற்கு, மயிலம் சாலை, வானுாரில் 130 ஏக்கரில் அமைந்துள்ள அன்னபூர்ணா விவசாய பண்ணை நிலத்தில், 100 ஏக்கரை ஒப்படைக்க முன் வந்துள்ளது.பண்ணை இடத்தை கொடுப்பதற்கு ஆரோவில்வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஆரோவில்வாசிகள் கூறியதாவது:ஆரோவில் நிர்வாக குழு கொண்டு வரும் திட்டத்தை நாங்கள் யாரும் எதிர்க்கவில்லை; வரவேற்கிறோம். ஏற்கனவே கிரவுன் சாலை திட்டத்திற்காக பசுமையான மரங்களை வெட்டி சாய்த்தனர். அடுத்த கட்டமாக, ஆரோவில் நகருக்குள் இருக்கும் தனியார் இடத்தை பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு வெளியில் இருக்கும் ஆரோவில் நிலத்தை வழங்கி வருகின்றனர். இதில் தவறுகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.தற்போது சென்னை ஐ.ஐ.டி., நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளனர். இதுபோன்ற சிறந்த நிறுவனங்கள் வருவதை நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயத்தில் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக ஒரு செழிப்பான பண்ணையை அழிப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இந்த செயல் ஆரோவில் உருவாக்கப்பட்ட காரணங்களுக்கு எதிரானது.100 ஏக்கர் பண்ணை நிலத்தை வழங்குவதில் ஆரோவில் நிர்வாகம் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக, ஆரோவில் வாசிகளுடன் எந்த ஒரு ஆலோசனையும் நடத்தவில்லை. பண்ணையில் உள்ள 130 ஏக்கரில் பல ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது.வேலைவாய்ப்புஇந்த இடத்தை கொடுப்பதற்கு பதிலாக வேறு இடத்தை கொடுக்க ஆரோவில் முன்வர வேண்டும். இல்லையென்றால் ஆரோவில் நிர்வாகத்திற்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.ஆரோவில் அறக்கட்டளை அளித்துள்ள விளக்கம்:அன்னபூர்ணா பண்ணையில், 30 ஏக்கரில் மட்டுமே விவசாயம் நடக்கிறது. மீதமுள்ள நிலம் சரியாக பயன்படுத்தப்படவில்லை. பண்ணை பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்குகிறது. ஆரோவில்லில் உள்ள அனைத்து பண்ணைகளும் சேர்ந்து 2,800 மக்களின் உணவு தேவையில் 12 சதவீதத்தை மட்டுமே தருகின்றன.அன்னபூர்ணாவில் உள்ள 100 ஏக்கர் நிலத்தில் ஐ.ஐ.டி., வளாகம் கட்டப்படும். இதனால் சுற்றுவட்டாரப் பகுதியில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள் ஏற்படும். இங்கு வேலை செய்பவர்களுக்கு மாற்று பண்ணையில் வேலை வழங்கப்படும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்