உள்ளூர் செய்திகள்

கலைச்சொல் உருவாக்கத்தில் குழப்பம்: தனித்தனியாக செயல்படும் அரசு துறைகள்

சென்னை: கலைச்சொல் உருவாக்கத்தில், பல்வேறு துறையினர் ஈடுபடுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.தொழில்நுட்பம் சார்ந்து, தினம் தினம் புதிய துறைகள் உருவாகின்றன. அவை சார்ந்த கருவிகள், பயன்பாடுகள் சார்ந்து, பல்வேறு கலைச்சொற்கள் உருவாகின்றன. அவற்றை, தமிழ் மொழிக்கு ஏற்ப மொழிப் பெயர்க்க வேண்டியது அவசியம்.அதற்கான பணியில், 2016 முதல், தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் ஈடுபட்டுள்ளது.இங்கு புதிய சொற்கள் உருவாக்க, வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு, ஒவ்வொரு துறையிலும் அனுபவம் வாய்ந்ததுடன், தமிழ் மொழி புலமை பெற்றவர்களுடன், ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை விவாதித்து, புதிய சொற்களை உருவாக்குகிறது.அரசின் அனுமதியுடன் அரசாணை பெற்று, அந்த சொற்களை, தமிழ் இணைய கல்வி கழகத்தின் வாயிலாக, 'சொற்குவை' இணையதளத்தில் பதிவேற்றி வருகிறது. அந்த வகையில், இதுவரை, 14 லட்சத்துக்கும் அதிகமான சொற்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, சென்னை பல்கலையில், இதே பணிக்காக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில், தமிழ் வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பு ஈடுபட்டுள்ளது. அதன் சார்பில் உருவாக்கப்படும் சொற்கள், பத்திரிகைகளுக்கு அனுப்பப்படுகின்றன. அதில், பெரும்பாலான சொற்கள், ஏற்கனவே கண்டறியப்பட்டதாகவே உள்ளன.இதற்கு, தமிழ் வளர்ச்சி துறை அங்கீகாரம் அளித்துள்ளதா; இதில் எதை பயன்படுத்துவது என்ற குழப்பம் உள்ளது. இதே செயலில், தமிழ் பல்கலை உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.தமிழக அரசின் கீழ் இயங்கும் இந்த நிறுவனங்களுக்கு, ஒரே பணிக்காக வெவ்வேறு பெயரில் நிதி ஒதுக்குவதால், நிதி வீணாவதுடன், பல்கலைகளின் பரந்துபட்ட ஆய்வு பணிகளும் தொய்வடைந்துள்ளன.இதுகுறித்து, அகரமுதலி திட்ட இயக்ககத்தின் முன்னாள் இயக்குநர் தங்க.காமராசு கூறியதாவது:தமிழ் வளர்ச்சி துறையின் கீழ் இயங்கும் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் என்பது, சொற்பிறப்பியல் சார்ந்து இயங்கும் நிறுவனம். அதன் பணியை மற்றவர்கள் செய்ய வேண்டியது இல்லை. அகர முதலி திட்ட இயக்ககம் வழங்கும் கலைச்சொல்லில் திருப்தி இல்லாவிட்டால், வல்லுநர் குழு கூட்டத்தில் பங்கேற்று ஆட்சேபனை தெரிவிக்கலாம்.அதை விடுத்து, தனியாக புதிய சொல் உருவாக்கத்தில் ஈடுபடுவது, அந்த நிறுவனத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. இதை, தமிழ் வளர்ச்சி துறை தான் கவனித்து முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்