தேர்ச்சி மதிப்பெண் சதவீதம் குறைப்பு; ஆய்வு செய்ய அமைச்சர் விருப்பம்
உடுப்பி: ''எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பி.யு.சி., தேர்வில், தேர்ச்சி பெற மதிப்பெண் சதவீதத்தை குறைப்பது குறித்து, விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்,'' என உயர் கல்வித்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.உடுப்பியில் அவர் அளித்த பேட்டி:எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பி.யு.சி., தேர்வில், தேர்ச்சி பெற மதிப்பெண் சதவீதத்தை குறைப்பது குறித்து, உடனடியாக முடிவு எடுக்க கூடாது. நன்கு ஆய்வு செய்த பின், முடிவு செய்ய வேண்டும் என்பது, என் கருத்து. இது பற்றி ஆய்வு செய்யும்படி, கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பாவுக்கு, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.பெரும்பாலான கிராம பகுதிகளில், கல்லுாரிகள் கட்ட வேண்டும் என, எம்.எல்.ஏ.,க்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் அதற்கு முன், பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். கல்லுாரிகளை திறப்பதற்கு முன், அடிப்படை வசதிகளை செய்து கொள்ள வேண்டும்.தற்போது செயல்படும் கல்லுாரிகளை பலப்படுத்தவும், வேலை வாய்ப்புள்ள படிப்புகளை அறிமுகம் செய்வதிலும் மாநில அரசு ஆர்வம் காட்டுகிறது. கடந்த இரண்டு ஆண்டாக, 2,000 மாணவர்கள் வேலை வாய்ப்புள்ள படிப்புகளில் சேர்ந்துள்ளனர். பி.காம்., படிப்பில், நாங்கள் நான்கு பட்டப்படிப்புகளை அறிமுகம் செய்துள்ளோம்.மாணவர்கள் ஐந்தாவது, ஆறாவது செமஸ்டரில் அப்ரென்டிஸ்ஷிப் வாய்ப்புகள் பெறுவது குறித்து, க்ரோமா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். ஜாதி வாரி சர்வேயில் பங்கேற்க, இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவியும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சுதா மூர்த்தி மறுத்துள்ளனர்.அவர்கள் மீது எங்களுக்கு மிகுந்த கவுரவம் உள்ளது. சர்வே என்பதால் அனைவரும் தங்களின் ஜாதி, மதத்தை குறிப்பிட வேண்டும். காங்கிரஸ் அரசு நடத்தும் சர்வே பணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்.அடுத்த ஆண்டு, மத்திய பா.ஜ., அரசு நேரடியாகவே ஜாதி வாரி சர்வே நடத்தவுள்ளது. அப்போதும் எதிர்ப்பு தெரிவிப்பீர்களா.இவ்வாறு அவர் கூறினார்.