ஹிந்தி கற்பதில் என்ன பிரச்னை? மத்திய இணையமைச்சர் ஷோபா கேள்வி
பெங்களூரு: “ஹிந்தி கற்பதில் என்ன பிரச்னை. மாணவர்கள் ஹிந்தி கற்க மாட்டோம் என சொன்னார்களா. மும்மொழி கொள்கை குறித்து தேவையில்லாத குழப்பத்தை காங்கிரஸ் அரசு ஏற்படுத்துகிறது,” என மத்திய இணையமைச்சர் ஷோபா கடுமையாக விமர்சித்தார்.கர்நாடகாவில் மும்மொழிக் கொள்கை அமலில் இருக்கிறது. 10ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாயம் மூன்று மொழிகள் படித்து ஆக வேண்டும். 3வது மொழியாக ஹிந்தி அல்லது வேறு மொழிகளை தேர்வு செய்து படிக்கலாம். பெரும்பாலானோர் ஹிந்தியே படிக்கின்றனர்.இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 3வது மொழித்தேர்வின் மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா சமீபத்தில் தெரிவித்தார். இது, ஹிந்திக்கு எதிரான நடவடிக்கை என கூறப்பட்டது. மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழாக்கிறது என பா.ஜ.,வினர் குற்றம்சாட்டினர்.'பா.ஜ., ஆளும் வட மாநிலங்களில் மூன்றாவது மொழியாக மாணவர்கள் கன்னடம் படிக்கும் நிலைமையை உங்களால் உருவாக்க முடியுமா' என காங்கிரஸ் கூறியது. இப்படி பலரும் பல விதமான கருத்துகளை தெரிவித்து வந்தனர்.இவ்விவகாரம் குறித்து, நேற்று மத்திய இணையமைச்சர் ஷோபா கூறியதாவது:மொழியை கற்பது திணிப்பு கிடையாது. ஹிந்தி கற்பதில் என்ன பிரச்னை இருக்கிறது. மும்மொழி கொள்கை குறித்து காங்கிரஸ் அரசு தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அனைவரும் அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும்.மாணவர்கள் ஆண்டு முழுதும் ஹிந்தி கற்று வந்தனர். தேர்வு தொடங்கியதும் ஹிந்தி மொழிப்பாட மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட மாட்டாது என கூறியது நியாயமற்றது. ஹிந்தி படிக்க மாட்டோம் என மாணவர்கள் சொன்னார்களா அல்லது அவர்களின் பெற்றோர் சொன்னார்களா.கல்வி அமைச்சருக்கு சிறிதும் கல்வியறிவு இல்லை. இவ்விஷயத்தில் முதல்வர் ஏன் அமைதியாக இருக்கிறார். காங்கிரஸ் அரசு பொறுப்பற்று செயல்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.