திருக்கோவிலுார் ஞானானந்தா பள்ளியில் ஆர்.டி.இ., திட்ட மாணவர் சேர்க்கைக்கு தேர்வு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஞானானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆர்.டி.இ., எனப்படும் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான குலுக்கள் நடந்தது.இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்.கே.ஜி., அல்லது 1ம் வகுப்பில் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகிறது. அதன்படி திருக்கோவிலுார் ஞானானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்வதிற்கான குலுக்கல் நேற்று நடந்தது.இத்திட்டத்தின் கீழ் 24 மாணவர்கள் சேர்க்கை இடங்களுக்கு 93 பேர் பதிவு செய்திருந்தனர். இதில் 41 மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், பயனாளிகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி பள்ளி வளாகத்தில், பெற்றோர்கள் முன்னிலையில், ரிஷிவந்தியம் வட்டார கல்வி அலுவலர் கஜேந்திரன் தலைமையில் நடந்தது. தகுதியுள்ள 52 மனுக்களில், குலுக்கல் முறையில் 24 பேரை தேர்வு செய்தனர்.கீழையூரை சேர்ந்த வழக்கறிஞர் சதீஷ் தனது பிள்ளைக்கான மனு நிராகரிக்கப்பட்டிருப்பது குறித்து வட்டார கல்வி அலுவலரிடம் முறையிட்டார். தள்ளுபடி செய்யப்பட்ட தனது மனுவிற்கான காரணம் குறித்து எழுத்து மூலமாக பதில் கேட்டார். பள்ளி அமைவிடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளதால் மனு நிராகரிக்கப்படுவதாக வட்டார கல்வி அலுவலர் எழுத்துப்பூர்வமாக பதில் கொடுத்தார். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அமானுல்லா, போலீஸ் சதீஷ் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.