நாட்டின் வளர்ச்சிக்காக சீர்திருத்தங்களை நோக்கி செயல்படும் அரசு: எல்.முருகன் பாராட்டு
சென்னை: “நாட்டின் வளர்ச்சிக்காக, வேகமாக முன்னேற வேண்டும் அந்த முன்னேற்றத்திற்காக சீர்திருத்தங்களை நோக்கி நமது அரசாங்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது” என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.சென்னையில் நிருபர்களிடம் மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: பிரதமர் மோடி நாட்டுக்கு ஒரு வாக்குறுதிகளை கொடுத்திருந்தார். ஒரே வருடத்தில் மத்திய அரசில் உள்ள அரசு பணியிடங்களை நிரப்புவோம் என்று கூறியிருந்தார். அதன்படி போன வருடம் 10 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளது.தற்போது இன்னும் அரசு பணியிடங்கள் நிரப்பும் பணி நடந்து வருகிறது. இது வரை மொத்தமாக 12 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசில் பணிபுரிபவர்களுக்கு பிரதமர் மோடி ஒரு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். இது பணி அல்ல; தேசத்தை கட்டமைக்க வேண்டிய பொறுப்பு என பிரதமர் மோடி கூறியுள்ளார்.நாம் 2047ல் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும். வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாம் செல்லுகின்ற பயணத்தில் நமது இளைஞர்களின் சக்தி, திறமை போற்றப்படுகிறது. இளைஞர்கள் ஆற்றல் மிக்கவர்களாக இந்த தேசத்தை கட்டமைப்பவர்களாக வல்லரசு பாரதத்தை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டியது பிரதமர் மோடியின் வலியுறுத்தல் ஆகும்.இன்றைக்கு பணி நியமன ஆணை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் மட்டும் 17 வந்தே பாரத் ரயில் சேவைகள் உள்ளன. இந்தியா முழுவதும் இந்த சேவை உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை சேவைகள் ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் புரட்சியை ஏற்படுத்த வேண்டும்.சட்டங்கள் எளிமையாக இருக்க வேண்டும். இதனால் தான் 1500 தேவையில்லாத சட்டங்கள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாலு குற்றப்பிரிவு சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்காக, வேகமாக முன்னேற வேண்டும் அந்த முன்னேற்றத்திற்காக சீர்திருத்தங்களை நோக்கி நமது அரசாங்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. 2047ல் நாம் வல்லரசு நாடாக வலிமைமிக்க நாடாக மாற வேண்டும் என்பதற்காக பணியை செய்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.