உள்ளூர் செய்திகள்

கோட்டூர் அரசு பள்ளி பவள விழா முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு

ஆனைமலை: கோட்டூரில், முன்னாள் மாணவர்கள் இணைந்து அரசு பள்ளியின் பவளவிழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.கோட்டூரில், அரசு பள்ளி கடந்த,1952ம் ஆண்டு ஓட்டு கட்டடத்தில் துவங்கப்பட்டது. நன்கொடையாளர்கள், அரசு உதவியுடன் கட்டடம் மற்றும் ஆய்வக கூடங்கள் உருவாக்கப்பட்டன. கடந்த, 1972ல், இருபாலர் பள்ளியாக இருந்து, பெண்கள் உயர்நிலைப்பள்ளி தனியாக பிரிந்தது.கடந்த, 1978 - 80ம் ஆண்டுகளில், மேல்நிலை துவங்கப்பட்டது. தற்போது, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியாக செயல்படுகிறது.இப்பள்ளி கடந்த, 2001 - 2002ம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது. தற்போது, பள்ளியின் பவள விழாவை நடத்த, முன்னாள் மாணவர்கள் முயற்சி மேற்கொண்டனர்.பள்ளி கட்டடங்களை புனரமைத்து, விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விழுதுகள் முன்னாள் மாணவர்கள் மன்றத்தினர், பல்வேறு நன்கொடையாளர்கள் வாயிலாக, 75 லட்சம் ரூபாய் செலவில் பள்ளியை புனரமைக்க நடவடிக்கை எடுத்தனர்.பணிகள் முடிவடைந்த நிலையில் வரும், 28ம் தேதி பள்ளிக்கு பவள விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கல்வி ஆர்வலர்கள் கூறுகையில், “பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து உதவிகளை செய்து கட்டடங்களை புனரமைத்துள்ளனர். பள்ளியை புதுப்பொலிவாக மாற்றியதுடன், பவள விழா நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்