உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும் கால்நடை மருத்துவ படிப்பு கவுன்சிலிங்

நாமக்கல்: “நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும், தமிழகத்தில் பி.வி.எஸ்.சி., கால்நடை மருத்துவ படிப்புக்கான சேர்க்கை கவுன்சிலிங் துவங்கும்” என, பல்கலை துணை வேந்தர் (பொ) நரேந்திரபாபு கூறினார்.நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், கல்லுாரி ஆண்டு விழா மற்றும் விடுதி தின விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் செல்வராஜூ தலைமை வகித்தார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் (பொ) நரேந்திரபாபு, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை ஐ.ஐ.ஆர்.எப்., தரவரிசை பட்டியலில், தேசிய அளவில் அனைத்து கால்நடை மற்றும் மீன்வள கல்வி நிறுவனங்களுக்கிடையில், 4வது இடத்தையும், கால்நடை மருத்துவ பல்கலைகளுக்கிடையில், முதல் இடத்தையும் பெற்றுள்ளது.கால்நடை மருத்துவ மாணவர்கள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளில் அதிக ஈடுபாடு கொண்டு, கால்நடைத் துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளுக்காக, 16 திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.அதற்கான நிதி உதவிகளை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பல்கலையின் கீழ் செயல்படும் கல்லுாரிகளில், பி.வி.எஸ்.சி., கால்நடை மருத்துவம் மற்றும் மீன்வள படிப்புகளுக்காக, 20,100 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். 'நீட்' தேர்வு முடிவுகள் வெளியான பின், 660 பி.வி.எஸ்.சி., கால்நடை மருத்துவ படிப்பு இடங்கள் மற்றும் 100 பி.டெக்., இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கப்படும்.சேலம், தேனி, உடுமலைப்பேட்டை அரசு கால்நடை மருத்துவ கல்லுாரிகளுக்கு வெட்னரி கவுன்சிலிங் அனுமதி கிடைத்தால் கூடுதலாக, 100 இடங்கள் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.தனியார் கால்நடை மருத்துவ கல்லுாரிகள் தொடங்க இது வரை யாரும் விண்ணப்பிக்கவில்லை. நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரியில் தோல் தொழிற்சாலை அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை ஆட்சிக்குழு உறுப்பினர் நாகராஜன், பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்