அரசியல் சாசன அமைப்புகளை தாக்குவதா? ஹார்வர்டு பல்கலை அறிஞர்கள் கண்டனம்
புதுடில்லி: தேர்தல் கமிஷன், உச்ச நீதிமன்றம், அமலாக்கத் துறை போன்ற அரசியல் சாசன அமைப்புகள் மீதான தாக்குதல்கள் கவலையளிப்பதாக ஹார்வர்டு பல்கலையுடன் தொடர்புடைய அறிஞர்கள், விஞ்ஞானிகள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் உட்பட 44 பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.நாடு முழுதும் நடந்து வரும் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராகவும், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தியும், கரப்பான்பூச்சி கட்சி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான, 'இண்டி' கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், அமெரிக்காவின் ஹாவர்டு பல்கலையுடன் தொடர்புடைய வழக்கறிஞர்கள், கொள்கை வகுப்பாளர்கள், அரசு அதிகாரிகள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் என 44 பேர் கரப்பான்பூச்சி கட்சி மற்றும் 'இண்டி' கூட்டணி நடத்தி வரும் போராட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக 44 பேரும் திறந்த கடிதத்தை எழுதியுள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது:உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இங்கு அரசியல் சாசன அமைப்புகளான தேர்தல் கமிஷன், உச்ச நீதிமன்றம், அமலாக்கத் துறைக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் கவலை அளிக்கின்றன.ஜனநாயகத்தில் போராட்டம் நடத்துவதற்கு முழு உரிமை இருக்கிறது. அதே சமயம், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, அரசியல் சாசன அமைப்புகள் மீதான நம்பிக்கையை சீர்குலைப்பது ஏற்கத்தக்கது அல்ல. நாட்டின் அரசியல் சாசன அமைப்புகளுக்கு எதிராக எதிர்மறையான பரப்புரைகளும், ஒருங்கிணைந்த தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன.இது போன்ற சூழலில், அரசு மவுனமாக இருக்கக் கூடாது. இந்தியா முற்றுகையிட்டிருப்பதை போன்ற கருத்துகளை பரப்புவதும், அரசியல் சாசன அமைப்புகளில் உயர் பதவி வகிப்போரை, 'திருடர்கள்', 'சமரசம் செய்து கொண்டவர்கள்' என விமர்சிப்பது, ஜனநாயக அமைப்பின் மீதான நம்பிக்கையை பொதுமக்களிடையே சீர்குலைத்துவிடும்.பொது அமைதியை பாதுகாக்க சட்ட அமலாக்க அமைப்புகள் எடுக்கும் நடவடிக்கைகளை நியாயமான முறையில் ஆய்வு செய்ய வேண்டும். அதை விடுத்து, ஆதாரம் இல்லாமல் குற்றங்களை சுமத்தக் கூடாது.அரசு ஊழியர்கள் வகிக்கும் பதவிக்கு மரியாதை தரப்பட வேண்டும். கண்ணியம் காக்கப்பட வேண்டும்.தேர்ந்தெடுத்த விவகாரத்தில் மட்டும் எதிர்ப்பை காட்டக் கூடாது. அரசியலை விட, ஜனநாயக அமைப்புகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.