தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல்; 2 பேர் கைது
புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்திற்கு அத்துமீறி நுழைந்து, மாணவி மற்றும் அவரது நண்பரை தாக்கிய விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில், கடந்த 11ம் தேதி, விடுதியில் தங்கி படிக்கும் வெளிமாநில மாணவி ஒருவர், தனது நண்பருடன் நடந்து சென்றார். அங்கு மதுபோதையில் 2 பைக்குகளில் வந்த 4 வாலிபர்கள், மாணவி மற்றும் அவரது நண்பரை வீடியோ எடுத்து தகராறு செய்தனர்.இருவரும் மாறிமாறி வீடியோ எடுத்தபோது மோதல் உருவானது. இதில் படுகாயம் அடைந்த மாணவி, கதிர்காமம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த விவகாரம் தொடர்பாக மாணவி புகார் அளிக்க முன்வரவில்லை என, போலீசார் தெரிவித்தனர்.இச்சம்பவம் தொடர்பாக தொழில்நுட்ப பல்கலைக்கழக நிர்வாகம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மாணவி மற்றும் மாணவரிடம் தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்டது, தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர் மற்றும் அவரது உறவினர்கள் என தெரியவந்தது.தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, மாணவர்களை ஆபாசமாக திட்டிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக பதிவாளர் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார்.காலாப்பட்டு போலீசார் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைதல், மாணவர்களை ஆபாசமாக திட்டுதல் என்ற பிரிவுகளின் கீழ் மர்ம நபர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது, மேட்டுப்பாளையம் தனியார் கம்பெனியில் பணியாற்றும் அரும்பார்த்தபுரம் ஷாம், 19; வில்லியனுார் திருக்காஞ்சி சாலையைச் சேர்ந்த அரசு கலை கல்லுாரி மாணவர் விமல், 19; மற்றும் இரண்டு சிறுவர்கள் என தெரியவந்தது.ஷாம் மற்றும் விமலை காலாப்பட்டு போலீசார் நேற்று கைது செய்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் 17வயது சிறுவர்கள் இருவரை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.