உள்ளூர் செய்திகள்

பள்ளி பஸ் மீது விழுந்தது மின் கம்பம் அதிர்ஷ்டவசமாக 20 மாணவர்கள் தப்பினர்

தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை பைப் லைன் சாலையில் உள்ள மின் கம்பம் இரண்டு துண்டாக முறிந்து, தனியார் பள்ளி பஸ் மீது விழுந்தது. அதிர்ஷ்ட வசமாக 20 மாணவர்கள் உயிர் தப்பினர்.ராபர்ட்சன்பேட்டை பைப் லைன் சாலையில் மின் கம்பங்கள் உள்ளன. இதில் இருந்து அப்பகுதியில் குடியிருப்போருக்கும், மளிகை கடைகள், சில்லரை கடைகள், காயலான் கடை, மட்டன் ஸ்டால் என பலவற்றிற்கும் மின் சப்ளை செய்யப்படுகிறது.நேற்று முன்தினம் பள்ளிகள் அரைநாள் விடுமுறை என்பதால், பகல் 1:00 மணியளவில், மாணவர்களுடன் தனியார் பள்ளி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த வேளையில், மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த ஒரு பெஸ்காம் மின் கம்பம் முறிந்து, பஸ் மீது வீழ்ந்தது.உடனடியாக பஸ்சில் இருந்த 20 மாணவர்களும், அவசர அவசரமாக கீழே இறங்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக மின் பாதிப்பு ஏற்படவில்லை. மின் கம்பியில் உள்ள மின்சாரம் பஸ் மீது பாய்ந்திருந்தால் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அப்பகுதியினர் கூறுகின்றனர்.பெஸ்காம் நிறுவனத்தின் அலட்சியப்போக்கே, இச்சம்பவத்துக்கு காரணம் என்று தெரிகிறது. இது போன்ற பழுதடைந்த மின் கம்பங்கள், நகரில் பல இடங்களில் உள்ளன. அவைகளையும் விரைந்து மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.பல இடங்களில் உள்ள இரும்பு மின் கம்பங்களை அகற்றி, சிமென்ட் கான்கிரீட் கம்பங்களாக மாற்றி வருகின்றனர். ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில், பல ஆண்டுகளாக இரும்பு மின் கம்பங்களே உள்ளன. இதனையும் மாற்ற வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்