தேசிய வருவாய் மற்றும் திறன் வழி தேர்வு காஞ்சியில் 4,076 மாணவர்கள் பங்கேற்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் வழித் தேர்வு ஆண்டுதோறும் நடக்கிறது.இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதந்தோறும், 1,000 ரூபாய் என, நான்கு ஆண்டுகளுக்கு 48,௦௦௦ ரூபாய் கல்வி உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது.தமிழகத்தில், 2024 - 25ம் கல்வியாண்டிற்கான தேர்வு நேற்று நடந்தது. பெரிய காஞ்சிபுரம் ஆற்காடு நாராயணசாமி முதலியார், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தேர்வு மையத்தை ஆய்வு செய்த, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி கூறியிதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் வழித் தேர்வு 15 மையங்களில் நடக்கிறது. இத்தேர்வு எழுத மாவட்டம் முழுதும், 4,145 மாணவ, மாணவியர் விண்ணப்பித்து இருந்தனர்.இதில், 4,௦76 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். தவிர்க்க முடியாத காரணங்களால், 69 பேர் மட்டுமே தேர்வு எழுத வரவில்லை. அதன்படி, 98.3 சதவீதம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்.மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்கள், தேர்வுக்கு என, பொறுப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, எப்படி படிக்க வேண்டும்; தேர்வு எப்படி எழுத வேண்டும், முக்கிய வினாக்கள் குறித்தும், தேர்வுக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என பயிற்சி அளிக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.