உள்ளூர் செய்திகள்

படிப்பை கைவிடும் சிறுமிகள்; தடுக்க அரசு புது திட்டம்

புதுடில்லி: தங்களின் தம்பி, தங்கைகளை கவனித்துக் கொள்வதற்காக, பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடும் சிறுமிகளை எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்காக, சிறு குழந்தைகளுடன்  (தம்பி, தங்கைகளுடன்) சிறுமிகள் பள்ளிக்கு வருவதை அனுமதிக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிக்கை ஒன்றை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: தங்களின் தம்பி, தங்கைகளை அல்லது சிறு குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக பள்ளி படிப்பை பாதியில் கைவிடும் சிறுமிகள் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. அதனால், அந்தச் சிறு குழந்தைகளுடன் சிறுமிகள் பள்ளிக்கு வருவதை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இச்சிறு குழந்தைகளுக்காக, மாநில அரசின் கல்வித்துறை, ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகள் காப்பகங்களையும், அங்கன்வாடி மற்றும் பால்வாடிகளையும் ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம், சிறுமிகள் பள்ளிக்கு வந்து பாடங்களை படிப்பதோடு, தங்களின் தம்பி, தங்கைகளையும் கவனித்துக் கொள்ள முடியும். அங்கன்வாடி மற்றும் பால்வாடி அமைப்பதற்காக, பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்துடன் ஒப்பந்தம் ஒன்றும் போடப்பட்டுள்ளது. அதனால், ஆறு வயதிற்கு குறைவான குழந்தைகளை, அவர்களின் மூத்த சகோதரிகள் பள்ளிக்கு கொண்டு வரலாம். அச்சிறு குழந்தைகளுக்கு மதிய உணவும் வழங்கப்படும். மேலும், சிறுமிகள் கொண்டு வரும் குழந்தைகள் விளையாட, பொம்மைகள் மற்றும் விளையாட்டு பொருட்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும். அதேநேரத்தில், அந்த சிறு குழந்தைகள் தங்களின் சகோதரிகளை விட்டு பிரிய மறுத்தால், அவர்களை வகுப்பறையிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும். எந்த வகையிலும், சிறுமிகள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் கை விடக்கூடாது. இவ்வாறு மத்திய அரசு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்