உள்ளூர் செய்திகள்

அமெரிக்க அறிஞருக்கு அவமானம்: வருங்காலத்துக்கு நல்லதல்ல என்கிறார் பேராசிரியர்

அமெரிக்காவை சேர்ந்த, இஸ்லாமிய பெண் அறிஞர், ஆமினா வாதூத். இவர், இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் மற்றும் முன்னேற்றம் குறித்து பேசியும், எழுதியும் வருகிறார். இவரின், "குரான் அண்டு உமன், இன்சைடு த குரான் ஜெண்டர் ஜிகாத்" என்ற, இரண்டு நூல்களும் இஸ்லாமியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தின. சென்னை பல்கலையில் உள்ள, இஸ்லாமிய கல்வி மையம், ஆமினா வாதூத் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு, ஏற்பாடு செய்திருந்தது. கடந்த, 29ம் தேதி காலை, 11:00 மணிக்கு, சென்னை பல்கலை நூற்றாண்டு கட்டடம், தந்தை பெரியார் அரங்கில், "இஸ்லாம்- பாலினம் மற்றும் மறுசீரமைப்பு" என்ற தலைப்பில், அவர் பேசுவதாக இருந்தது. திடீரென இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து, சென்னை பல்கலை பதிவாளர், கோட்டீஸ்வர பிரசாத்திடம் கேட்டபோது, "ஆமினா வாதூத் பேச்சால், பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என, காவல் துறையினர் அறிவுறுத்தியதால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது" என்றார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, "ஆமினா வாதூத், இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக பேசி வருகிறார்; இதனால் பிரச்னைகள் வரும் என, இஸ்லாமிய அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே, நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் வாய்மொழியாக அறிவுறுத்தினோம்" என்றனர். நிகழ்ச்சி ரத்தானது குறித்து, சென்னை பல்கலையின் இஸ்லாமிய கல்வி மைய பேராசிரியர் அப்துல் ரஹ்மான் கூறியதாவது: ஆமினா வாதூத் பேச்சால், சட்டம், ஒழுங்க பாதிக்கும் என, போலீஸ் அனுமதி தர மறுத்துவிட்டது. பிரச்னை வரும் என்றால் போலீஸ் பாதுகாப்பு கொடுத்திருக்கலாம். நடத்த விடாமல் செய்தது வருத்தத்திற்குரியது; இது சரியான நடைமுறை அல்ல. ஆமினா வாதூத், உலக அளவில் பிரசித்தி பெற்ற அறிஞர். அவரது நூல்கள், 14 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான கல்வித் திட்டத்தில், "உமன் அண்டு ஜெண்டர் இன் இஸ்லாம், உமன் அண்டு லா இன் முஸ்லிம் சொசைட்டி, இஸ்லாமிக் தாட்" ஆகிய பாடங்கள் உள்ளன. உலக அளவிலான கருத்துக்கள் காலத்திற்கேற்ப சேர்க்கப்படுகின்றன. அதன்படி, ஆமினா வாதுத் கருத்துக்களும், மாணவர்களுக்கு பாடமாக உள்ளன. உலக அளவிலான தகவல்கள் விவாதிக்கப்படுகின்றன. அவரை அழைத்தன் ஒரே நோக்கம், நல்ல அறிஞரை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான். அவருடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அல்ல. இங்கு கற்பித்தல் மட்டுமே நடக்கிறது; கருத்து திணிப்பல்ல. அவருடன் விவாதங்கள் நடத்தி, தேவையான கருத்துக்களை எடுத்துக் கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரை, அவரை நாம் பயன்படுத்த தவறி விட்டோம். இன்னும் சொல்லப்போனால், அமெரிக்க அறிஞரை அழைத்து, அவமானப்படுத்தி விட்டோம் என்பது தான் உண்மை. இது, தற்போதைய காலத்திற்கும், வருங்காலத்திற்கும் நல்லதல்ல. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்