சவால்களை சந்திக்க மாணவர்கள் தயாராகணும்: அறிவியல் ஆலோசகர் சிதம்பரம்
திருச்சி: திருச்சி என்.ஐ.டி.,யில் ஒன்பதாவது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில், மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய, இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் சிதம்பரம் பேசியதாவது: உலகளாவிய அறிவு வளர்ச்சியில், பங்களிப்பை அளிக்கும் வகையில் அடிப்படை ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும். எந்த ஒரு நாகரீக நாட்டிற்கும், அடிப்படை ஆராய்ச்சி என்பது அவசியமான கலாசாரமாகும். ஆராய்ச்சிகள் அனைத்தும், தொழிற்சாலைகள் சார்ந்த தொழில்நுட்பகளை மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். இலக்கு உள்ள ராணுவம் போன்ற துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மேற்கொள்ளுதல், நம்நாட்டிற்கு முக்கியமானதாகும். அதனால் ஆராய்ச்சியை வலுப்படுத்த வேண்டும். தரமான ஆராய்ச்சியில் முதலீடு செய்வது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். நம் நாட்டின் வளர்ச்சியும், நாட்டின் பாதுகாப்பும் நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது. நம்நாடு முன்னணி பட்டியலில் இருக்க அனைத்து துறை வளர்ச்சியும் முக்கியம். பெல் நிறுவனத்துடன் திருச்சி என்.ஐ.டி., சில துறைகளில் இணைந்து செயல்படுவது வரவேற்கத்தக்கது. அணு, விண்வெளி, ராணுவத்தில் சில துறைகள் தவிர, பிற துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஆதரவற்ற நிலை உள்ளது. அதனால் தான், அமெரிக்கா போன்ற நாடுகளின் பொருளாதார கட்டமைப்பில் இருந்து இந்தியாவின் பொருளாதார அமைப்பு மாறுபட்டு உள்ளது. இதை மாற்றி அமைக்க வேண்டும். அமைதி வழியில் அணு தொழில்நுடப் பயன்பாட்டில் இந்தியா வெற்றி கண்டிருப்பது, வளரும் நாடுகள் கவனத்தை ஈர்த்துள்ளது. கிராமப் புறங்கள் தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சி அடைய, அறிவியல் துறை சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் எட்டு ஐ.ஐ.டி.,க்கள், திருச்சி என்.ஐ.டி.,யிலும் துவங்கப்பட்டுள்ளது. சவால்கள் மிகுந்த வாய்ப்புகள் நம் நாட்டில் அதிகம் உள்ளது. அதற்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு சிதம்பரம் பேசினார். 2012-13ம் கல்வி ஆண்டில் பட்டம் பெற இளங்கலையில் 828 பேர், முதுகலையில் 639 பேர், ஆராய்ச்சியில் 21 பேர், பிஹெச்.டி.,யில் 59 பேர் என, மாணவர்கள் 1,252 பேரும், 295 மாணவிகள் என மொத்தம் 1,547 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில், 990 பேர் நேற்று நடந்த விழாவில் பட்டம் பெற்றனர்.