நிதி ஒதுக்கியும் சீரமைக்கப்படாத பழம்பெரும் கல்லூரியின் மாணவர் விடுதி
சேப்பாக்கம்: சென்னை மாநில கல்லுாரி மாணவர் விடுதியின் சீரமைப்பிற்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரண்டு மாதங்களாகியும், இதுவரை எவ்வித சீரமைப்பு பணிகளும் நடக்கவில்லை. மழைக்காலம் துவங்கி விட்ட நிலையில், விடுதி வளாகம், கழிவுநீர் தேக்கத்தில் மிதக்கிறது. சென்னை மாநில கல்லுாரியில், விக்டோரியா கட்டடத்தில், மாணவர்கள் விடுதி இயங்குகிறது. அதில், 340 மாணவர்கள் தங்கி உள்ளனர். அவர்களில் 40 மாணவர்கள், காது கேட்க, வாய் பேச இயலாதோர்; 30 பேர், பார்வையற்றோர். மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தில்தான், கல்லுாரி நிர்வாகத்தால், மாணவர்களுக்கு சாப்பாடு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படுகின்றன. கடந்த செப்.,7ம் தேதி, திறந்தவெளி குளியல்; பெயர்ந்து விழும் கூரைப்பூச்சு; மாநில கல்லுாரி விடுதியின் அவலம் மாறுவது எப்போது? என்ற தலைப்பில், விக்டோரியா விடுதியின் அவலங்களை பட்டியல் இட்டு, படங்களுடன் விரிவான செய்தி, தினமலர் நாளிதழில் வெளியானது. அதையடுத்து, விடுதி சீரமைப்புக்கு 60 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாக, கல்லுாரி நிர்வாகம் அறிவித்தது. மாற்றம் இல்லை ஒரு வாரம் கழித்து, மாநகராட்சியின் சார்பில், மாணவர்கள் குளிக்கும் இடத்தில், நீர் தேங்காமல் வெளியேற, ஒரு சிறு கால்வாய் மட்டும் தோண்டப்பட்டது. அதையடுத்து, விடுதியின் சீரமைப்பு பணிகள், கிடப்பில் போடப்பட்டன. சீரமைப்பிற்கு போதிய நிதி ஒதுக்கி, இரண்டு மாதங்களாகியும், அரசு விடுதிக்கு இதுவரை விமோசனம் கிடைக்கவில்லை. இதனால், விடுதி மாணவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இன்றுவரை, விடுதியில் பழுதான மின் கம்பிகள், கூரை பூச்சு அடிக்கடி விழுவது, மோசமான நிலையில் தங்கும் அறைகள், உணவு கூடம் ஆகியவற்றின் நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை. பொறுமை ஏன்? விடுதி வளாகத்தில், குளிப்பது, துவைப்பது மற்றும் பிற கழிவுநீர் என, அனைத்தும் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுகிறது. பருவ மழைக்காலம் துவங்கி விட்டதால், நோய் தொற்றும் அபாயம் வேறு நிலவுகிறது. இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத விடுதி மாணவர்கள் சிலர் கூறியதாவது: சென்னையில், 175 ஆண்டு, பாரம்பரியமிக்க மாநில கல்லுாரியின் விடுதி, தற்போது கவனிப்பாரற்று, கழிவுநீரால் சூழப்பட்டு உள்ளது. மழைக்காலம் என்பதால், கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. அதனால் சில மாணவர்களுக்கு மலேரியா, டைபாய்டு காய்ச்சல்கள் வந்து விட்டன. இந்த அவலங்களை கண்டித்து, பல போராட்டங்களை நாங்கள் நடத்தி விட்டோம். எங்கள் முதல்வரிடம் சொன்னபோது, நான் புதிதாக வந்துள்ளேன். சம்பந்தப்பட்டோரிடம் பேச, அவகாசம் கொடுங்கள் என கூறினார். ஆனால், நாட்கள் ஓடியும் எதுவும் நடக்கவில்லை. தற்போது தேர்வுகள் நடந்து வருவதால் பொறுமையாக உள்ளோம். இந்த வாரத்திற்குள், அவலங்கள் சரியாகவில்லை எனில், சாலை மறியல், உள்ளிருப்பு போராட்டத்தில் குதிக்க திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு மாணவர்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர். இதுகுறித்து, கல்லுாரி முதல்வர் பிரம்மானந்த பெருமாள் கூறுகையில், "நான் பொறுப்புக்கு வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. துறை சார்ந்தவர்களை சந்தித்து முடிவெடுப்பேன்" என்றார்.