குழந்தைகள் மிகவும் அப்பாவிகள், அதேசமயத்தில் நேர்மையானவர்கள்: கைலாஷ் சத்யார்த்தி
சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில், குழந்தைகளின் உரிமைகளுக்காக பணியாற்றி வருகிறார், இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த, 60 வயது நிரம்பிய கைலாஷ் சத்யார்த்தி. அன்னை தெரசாவுக்குப் பிறகு, அமைதிக்கான நோபல் பரிசுபெறும் இரண்டாவது இந்தியரான இவர், தனது எண்ணங்கள், செயல்பாடுகள் மற்றும் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். கேள்வி: இத்தருணம், உங்களுக்கும், இந்தியாவிற்கும் ஒரு பெருமைமிகு தருணம். உங்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தவுடன் நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்? பதில்: இந்தப் பரிசை பெறுகிற அளவுக்கு, நான் பணியாற்றியுள்ளேனா! என்ற உணர்வுதான் எனக்கு ஏற்பட்டது. ஆனால் எனக்கு அந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. எனக்கு முன்னே நீண்டுள்ள கடமை என்னும் நீண்ட பாதைக்கு ஒரு தொடக்கமாக நோபல் பரிசு அறிவிப்பை உணர்ந்தேன். இது, எனக்கு மட்டுமான கவுரவம் கிடையாது. எனது பணியில், எனக்கு உதவிய அனைத்து இந்தியர்களுக்குமானது. இப்பணியோடு தொடர்புடைய குழந்தைகள், பெற்றோர்கள், பள்ளிகள், கல்லூரிகள், எனது சக ஊழியர்கள் மற்றும் தொடர்புடைய அனைவரும், இந்தப் பெருமையில் பங்கு பெறக்கூடியவர்கள். கேள்வி: நீங்கள் உண்மையிலேயே ஒரு கடினமான பணியில்தான் ஈடுபட்டுள்ளீர்கள்! இந்தியா போன்ற ஒரு நாட்டில், ஒரு குழந்தை நல ஆர்வலராக இருப்பது மிகவும் கடினம். பதில்: இப்பணி, முழுவதுமாக, குழந்தைகளின் மீதான பரிவினால் செய்யப்படக்கூடியதாகும். எனக்கு 6 வயதாக இருக்கையில் ஏற்பட்ட அனுபவம் மிக முக்கியமானது. ஒருநாள் நான் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கையில், என் வயதில் இருந்த ஒரு பையன், சாலையோரத்தில், தன் தந்தையுடன் செருப்புத் தைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதைக் கண்டேன். அப்போது, எனது நிலையையும், என் வயதையொத்த அந்த சிறுவனின் நிலையையும் நினைத்துப் பார்த்தேன். இந்த சமூகத்தின் மீது எனக்கு கோபம் வந்தது. "நாங்களெல்லாம் பணி செய்ய பிறந்தவர்கள்" என்று அந்தப் பையனின் தந்தை கூறியதைக் கேட்டவுடன், எனது கோபம் இன்னும் அதிகமானது. அந்த சம்பவத்தோடு நான் அமைதியாகி விடவில்லை. வளர்ந்து ஆளானதும், அதுபோன்ற குழந்தைகளுக்காக ஏதேனும் செய்ய வேண்டுமென நான் நினைத்தேன். கடந்த 1980ம் ஆண்டு, எனது ஆசிரியர் பணியைத் துறந்துவிட்டு, Bachpan Bachao Aandolan என்ற பெயருடைய அமைப்பைத் துவங்கினேன். கேள்வி: கொத்தடிமைக் குழந்தைகள் என்பது தொடர்பான உங்களின் இலக்கு என்ன? கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட, இதுதொடர்பான விழிப்புணர்வு, இப்போது மக்களிடம் அதிகரித்துள்ளதா? பதில்: ஆம். கடந்த காலங்களைவிட, இப்போது நிலைமை நிச்சயமாக மேம்பட்டுள்ளது மற்றும் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. சிறிதுசிறிதாக செயல்பட்டு, நம்மால், குழந்தை கொத்தடிமை முறையை முழுவதுமாக ஒழிக்க முடியும். நீடித்த மேம்பாடு(sustainable development) என்ற திட்டத்திற்குள், குழந்தை கொத்தடிமை ஒழிப்பு என்பதை சேர்த்துக் கொள்ளும் வகையிலான இலக்குடன் நாம் பணியாற்ற வேண்டும். கேள்வி: கல்வி அமைப்பிற்கும், குழந்தைகள் மீதான சுரண்டலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? பதில்: ஆம், நிச்சயமாக. ஒவ்வொரு குழந்தையும், தரமான கல்விப் பெறுவதை, நாம் கட்டாயம் நிச்சயிக்க வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும், தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை உறுதிசெய்ய வேண்டும். இந்த நிலையைக் கொண்டுவர, அரசு அமைப்புகள் மற்றும் சமூக நிறுவனங்கள் ஆகியவை, அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மாற்றங்கள் நடந்துகொண்டே வருகின்றன, ஆனால், மாற்றம் என்பது உடனடியாக தேவையை நிறைவு செய்ததில்லை. நமது கல்வி அமைப்பை மாற்றுவதற்கு முன்னால், நமது சமூக அமைப்பை மாற்ற வேண்டியுள்ளது. கேள்வி: உங்களுக்கு கிடைத்த இந்த நோபல் பரிசானது, பல லட்சம் குழந்தைகளுக்கு ஒரு உந்து சக்தியாக அமையும் என்று UNICEF அமைப்பு கூறியுள்ளதே? பதில்: ஆம், அப்படித்தான். நிறைய குழந்தைகளின் முகங்களில் சிரிப்பை பார்க்க முடிந்தால், அதில் அதிகம் சந்தோஷப்படும் மனிதன் நானாகத்தான் இருப்பேன். ஒரு குழந்தை பரிதாபகரமான முக பாவனையில் இருந்தால், அது எனக்கு சுத்தமாக பிடிக்காது. பெரியவர்கள், தங்களின் வலிமையைப் பெறுவதற்கான ஒரு சிறந்த வள ஆதாரமாக, குழந்தைகளால் இருக்க முடியும். குழந்தைகள் மிகவும் அப்பாவிகள்; அதேசமயத்தில், நேர்மையானவர்களும்கூட. அவர்கள், தவறான ஒரு பாதைக்கு செல்ல நேர்ந்தால், அது நிச்சயம், அவர்களின் தவறல்ல. அவர்களைச் சுற்றிய சூழல்களே, அதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஒவ்வொரு சமயத்திலும், அடிமைத் தளையிலிருந்து மீட்கப்பட்ட ஒரு குழந்தையின் முகத்தில் சிரிப்பை பார்க்கையில், எனக்கான நாள் உருவாகிறது. அந்த கணத்தில் நான் பெறுகின்ற சந்தோஷத்தை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. கேள்வி: நீங்கள் குழந்தைகளின் மீது மிகுந்த அன்பு கொண்டவராக காணப்படுகிறீர்களே! பதில்: ஆம். அவர்களே எனக்கான ஊக்கிகள். என்னைப் பொறுத்தவரை, குழந்தைகள், விடுதலை பெற்றவர்களாக இருக்க வேண்டும். சொந்தக் கருத்தை வெளியிடுவோராகவும், முடிவெடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும். கடந்த 1998ம் ஆண்டு நடந்த Global March against Child Labour என்ற நிகழ்வின்போது, குழந்தையின் கோரிக்கை கவனிக்கப்பட்டு, அது, ஜெனீவாவில் நடந்த சர்வதேச தொழிலாளர் அமைப்பினுடைய(ILO) மாநாட்டிலும் எதிரொலித்தது. தங்களுக்கான கோரிக்கை மற்றும் தேவைகளை, குழந்தைகளே, நேரடியாக பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்கு கொண்டு சேர்த்தார்கள் என்பது அந்த நிகழ்வில் மிகவும் முக்கியமானது. இதன்மூலம், குழந்தைகளிடையே இருக்கும் சக்தியும், ஞானமும் நமக்குத் தெரிய வந்தது. அவர்களுடைய நெறிமுறை சார்ந்த ஆற்றல் வியக்க வைப்பதாக இருக்கிறது. கேள்வி: கைலாஷ் சத்யார்த்தியைப் பொறுத்தவரை, குழந்தைகள் என்பதற்கு அர்த்தம் என்ன? பதில்: குழந்தைகள் என்றால் எளிமை என்று அர்த்தம்! நான் பெரியவர்களிடம் பேசும்போது, வழக்கமாக ஒன்றைச் சொல்வேன். அது, உங்களுக்குள் இருக்கும் குழந்தைத்தனத்தை மரணிக்க விட்டுவிடாதீர்கள் என்பதுதான். அந்தப் பண்பை, நீங்கள் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும்போது, வாழ்க்கையில் பெரிய மகிழ்ச்சியை அனுபவிப்பதோடு, வாழ்வினுடைய அர்த்தத்தையும் உணர்வீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதாக உணர்ந்தால், உங்களுக்குள் இருக்கும் குழந்தைத்தனமான உணர்வைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்; மகிழ்ச்சி தானாக வந்துவிடும். கேள்வி: இன்றைய நிலையில் பல பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு அதிக அழுத்தம் தந்து, பலவிதமான எதிர்பார்ப்புகளை சுமத்துகிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம். இது உங்களுக்கு கவலையளிப்பதாக இல்லையா? பதில்: நான் ஒரு குழந்தையாக இருந்திருந்தால், பெற்றோர்கள், நண்பர்களைப் போல் இருக்க வேண்டும் என எதிர்பார்த்திருப்பேன். மேலும், எங்களுக்கு அதிக செல்லம் கொடுத்து, தேவையின்றி எங்களுக்கு சலுகை காட்டாதீர்கள் என்றும், எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்; அதன்மூலம் வாழ்வில் நாங்கள் முன்னேறும் வழியை, உங்களது கண்களால் காண்பீர்கள் என்றும் அவர்களிடம் சொல்வேன். கேள்வி: மலாலா ஒரு இளம் போராளி. அவருக்கும் விருது கிடைத்ததில், நீங்கள் எந்தளவு மகிழ்ச்சியடைகிறீர்கள்? பதில்: மலாலாவைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நோபல் விருது அறிவிக்கப்பட்ட பிறகு, நான் அவரிடம் பேசினேன். நாங்கள் இருவருமே, ஒரு முக்கியமான மற்றும் சிறந்த நோக்கத்திற்காக, சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் பணியை மேற்கொள்கிறோம். அவரும் இந்தப் பரிசைப் பெற்றதில், எனக்குப் பெருமை! நன்றி : பேரன்ட்சர்க்கிள்