உள்ளூர் செய்திகள்

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி; கோவை வீரர்களுக்கு ரொக்கம்

கோவை: சென்னையில் நடந்த முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில், கோவையில் இருந்து பங்கேற்ற வீரர்கள், திறமையை நிரூபித்து ரொக்கப் பரிசு பெற்றனர். தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்த, முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு, கோவை, மதுரை, திருநெல்வேலி, சென்னை ஆகிய மண்டல அளவில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்கள், கடந்த 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை, சென்னையில் நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்றனர். தடகளம், கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து, கபடி, கூடைப்பந்து, டென்னிஸ், இறகுப்பந்து, மேஜைப்பந்து, நீச்சல் என 10 விளையாட்டுகள் இடம் பெற்றன. கோவை மண்டலத்தில் இருந்து, 25 வயதுக்கு உட்பட்டோர் ஆண்கள், பெண்கள் அணி என, மொத்தம் 226 பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பயிற்றுனர்கள் சுரேந்திரன், ரகுகுமார், ஜெயச்சந்திரன் ஆகியோர், விளையாட்டு வீரர்களை அழைத்து சென்றனர். மும்முனை தாண்டும் போட்டியில், சிவ அன்பரசி, வட்டு எறிதலில் விஷ்ணுவர்தன், நீச்சல், 200 மீ., ப்ரீ ஸ்டைலில் விஷாக் ஆகியோர் முதலிடம் வகித்து, தலா ஒரு லட்சம் பெற்றனர்.ஈட்டி எறிதலில் ஜோதிமணி, 3,000 மீ.,ல் பத்மாவதி, மும்முனை தாண்டுதலில் முகமது சலாவுதீன் ஆகியோர் இரண்டாவது இடம் பிடித்து, 75 ஆயிரம் பரிசுத் தொகை பெற்றனர். ஈட்டி எறிதலில் மதுப்ரியா, 5,000மீ.,ல் செந்தில்குமார், 200 மீ., ப்ரீ ஸ்டைலில், பாவிசக்தர், விஷ்ணு ஸ்ரீ, 50மீ., பட்டர்பிளை போட்டியில் தாப்னா சுதா ஆகியோர் மூன்றாமிடம் வகித்து, தலா 50 ஆயிரம் பரிசுத் தொகை பெற்றனர்.நித்யா, ரேவதி, மாலதி, கார்த்திகா, பிரியதர்ஷினி, தரணி பிரியா, ஐஸ்வர்யா, சிந்து, தீபிகா, வசந்தி, ப்ரீத்தி, விஜயலக்ஷ்மி ஆகியோர் பங்கேற்ற வாலிபால் போட்டியில், முதலிடம் பிடித்து, தலா ஒரு லட்சம் பெற்றனர். கூடைப்பந்து மகளிர் பிரிவில், ரினி, ஹேமலதா, நிவேதா, மீனுகுட்டி ஜார்ஜ், தனுசுயா, ஷர்மிளா, ஸ்ரேயங்கா, சிந்துஜா, மிருதுளா, அமிர்தா, ஜிம்சிமோல் ஜார்ஜ் கொண்ட குழுவினர், கூடைப்பந்து பிரிவில் இரண்டாமிடம் பிடித்து, தலா 75 ஆயிரம் ரொக்கம் பெற்றனர். டென்னிஸ் ஆண்கள், பெண்கள் பிரிவில் இரண்டாமிடம் பெற்றனர்.அரவிந்தன், தீபன்ராஜ், விஜித், பரணிதரன், கோகுல கிருஷ்ணன், டான்பால், மதுசூதனன், பரத் வன்சித், ராஜசேகர், சுகுணன், யோகராஜா ஆகியோர் பங்கேற்ற வாலிபால் போட்டியில் மூன்றாமிடம் பிடித்து, தலா 50 ஆயிரம் ரொக்கப் பரிசு பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்