‘தகவல் தொழில்நுட்ப கலாசாரம் அறிவுசார் குப்பை’: விஞ்ஞானி என்.ஆர்.ராவ்
பெங்களூரு: ”பெங்களூருவின் தகவல் தொழில்நுட்ப கலாசாரம், அறிவுசார் குப்பை,” என, பிரபல விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் விமர்சித்து உள்ளார். பெங்களூரு நகரம், தகவல் தொழில்நுட்பத்தில், பிரமாண்டமாக வளர்ச்சி அடைந்து வருவது, பலரையும் வியக்க வைத்துள்ளது. ஆனால், ’பாரத ரத்னா’ விருது பெற்றவரும், பிரபலமான விஞ்ஞானியும், பிரதமரின் அறிவியல் ஆலோசனை குழு தலைவருமான, சி.என்.ஆர்.ராவ், இதை ஏற்காமல், ’பெங்களூருவின் தகவல் தொழில்நுட்ப கலாசாரத்தை, அறிவுசார் குப்பை’ என, கடுமையாக விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக, பத்திரிகை ஒன்றில், அவர் எழுதி உள்ளதாவது: நான் பெங்களூரு நகரைச் சேர்ந்தவன். இந்த நகரம் ஒரு காலகட்டத்தில், அறிவுசார் நகரமாக இருந்தது. ஆனால், தற்போது, தகவல் தொழில்நுட்ப கலாசாரம், பெங்களூரு நகரில் வேகமாக வளர்ந்து வருவதால், அறிவுசார் குப்பை நகரமாகி விட்டது. தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி அடையும் முன், பெங்களூரு நகரம், எளிமையாகவும், கலாசார பெருமை மிக்கதாகவும் இருந்தது. ஆனால், சமீப ஆண்டுகளாக, பெங்களூரு நகரம், அதிக மாசு நிறைந்ததாகவும், குப்பைகள் எங்கும் சிதறிக்கிடக்கும் நகரமாகவும், தகவல் தொழில்நுட்பத் துறையினரால், அறிவுசார் குப்பைகள் கொட்டப்பட்டுள்ள நகரமாகவும் மாறி உள்ளது. நம் மதிப்புமிக்க கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை, தகவல் தொழில்நுட்பத் துறை அழிப்பது தொடர்ந்தால், பெங்களூரு நகரையும், தகவல் தொழில்நுட்பத் துறையையும் அழித்து விடலாம். இவ்வாறு, ராவ், காட்டமாக கூறியுள்ளார்.