பொதுத் தேர்வுகள் பணி ஒதுக்கீடு: கல்வித்துறை புதிய நிபந்தனைகள்
மதுரை: தமிழகத்தில் நடக்கவுள்ள பொதுத் தேர்வுகளுக்காக ஆசிரியர்கள் அலுவலர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்வதில் புதியகட்டுப்பாடுகளை கல்வித்துறை விதித்துள்ளது.தேர்வுப் பணிக்காக வினாத்தாள் கட்டுக்காப்பாளர் தேர்வு மைய முதன்மைகண்காணிப்பாளர் அறைக் கண்காணிப்பாளர் வினாத்தாள் சேகரிப்பு மைய அலுவலர் உட்பட 40 ஆயிரம் ஆசிரியர்கள் அலுவலர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படும். இப்பணிகள் ஒதுக்கீடு அந்தந்த சி.இ.ஓ.க்கள் டி.இ.ஓ.க்கள் கண்காணிப்பில் நடக்கும்.இந்தாண்டு இதில் பல மாற்றங்கள் மேற்கொள்ள சி.இ.ஓ.க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: தலைமையாசிரியர் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அந்தஸ்துக்குஏற்ப தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் பதவி முதல் அலுவலர்களுக்கான தேர்வு மைய உதவியாளர் வரை பணிகள் ஒதுக்குவது வழக்கம். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு பிரிவில் பணியாற்றுவோரை மாற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்துவது வழக்கம்.இந்தாண்டு 2023ல் பணி ஒதுக்கிய நபர்களுக்கு அதே பணிகள் ஒதுக்க வேண்டாம். அவர்கள் கேடர்களில் உள்ளவர்களுக்கு மாற்றாக அப்பணிகளுக்கு ஒதுக்க வேண்டும். உதவியாளர் உள்ளிட்டஅலுவலர்களுக்கு கடந்தாண்டு ஒதுக்கிய பள்ளி மையங்களுக்கு இந்தாண்டும் அதே இடத்தில் பணி ஒதுக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.பொதுவாக யாருக்கு எங்கே பணி ஒதுக்க வேண்டும் என்பதில்அலுவலர்களின் கை தான் ஓங்கியிருக்கும். அதுபோல் இந்தாண்டு இருக்க கூடாது என தேர்வுத்துறை எச்சரிக்கையாக உள்ளது என்றார்.ஆசிரியர்கள் கூறுகையில் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பு அலுவலர்கள் போன்ற பொறுப்புகளுக்கு மூத்த தலைமையாசிரியர்கள் நியமிக்கப்படுவர். இதில் மாற்றம் செய்தால் குழப்பம் ஏற்படும் என்றனர்.மதுரையால் மாற்றமாமதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் கடந்த பொதுத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடக்கிறது. முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணை நடக்கிறது. இதில் தேர்வு பிரிவில் பணியாற்றிய அலுவலர்கள் விடைத்தாள்களை மாற்றியது உள்ளிட்ட நுாதன குற்றங்களில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பலருக்கு தொடர்புள்ளதும், சிலரை முறைகேட்டில் திட்டமிட்டு சிக்க வைத்துள்ளதும் நடந்துள்ளது. மதுரை சம்பவத்தால் மாநில அளவில் இந்த மாற்றங்களை தேர்வுத்துறை கொண்டுவந்துள்ளது. அதேநேரம் மதுரையில் முறைகேட்டில் ஈடுபட்டு விசாரணைக்கு உட்பட்டவர்கள் அதே அலுவலங்களில் தான் தற்போது வரை பணியாற்றுகின்றனர். அவர்களைவேறு மாவட்டங்களுக்கு மாற்ற வேண்டும் என பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.