உள்ளூர் செய்திகள்

நாணயவியலின் தந்தை இரா.கிருஷ்ணமூர்த்தி ஆய்வுகள் பாடங்களில் இடம்பெற வேண்டும்

விருதுநகர்: நாணயவியலின் தந்தை இரா.கிருஷ்ணமூர்த்தியின் ஆய்வுகள் கல்லுாரி பாடங்களில் இடம்பெற வேண்டும், என விருதுநகர் ஸ்ரீவித்யா கல்லுாரியில் நடந்த நாணய கண்காட்சியில் வலியுறுத்தப்பட்டது.75வது சுதந்திர நாள் அமுதா பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விருதுநகர் ஸ்ரீவித்யா கலை கல்லுாரியில் தபால் தலை, நாணய கண்காட்சி நடந்தது. ஸ்ரீவித்யா கல்வி குழும தலைவர் திருவேங்கட ராமானுஜதாஸ், துணை தலைவர் வெங்கடேஷ் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். கல்லுாரி முதல்வர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.தினமலர் நாளிதழ் முன்னாள் ஆசிரியரும், சங்க கால நாணயவியலின் தந்தையுமான மறைந்த முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து நாணயவியல் குறித்து அவர் எழுதி வெளியிட்ட நுால்கள் பார்வையாளர்களுக்கு காட்சிபடுத்தப்பட்டன.மாவட்ட நாணய ஆர்வலர் மன்ற செயலாளரும், கல்லுாரி நுாலக ஆசிரியருமான ராம்குமார் பேசியதாவது: சங்க காலத்தில் பழந்தமிழ் மன்னர்கள் பயன்படுத்தி வெளியிட்ட நாணயங்களை கண்டுபிடித்த நாணயவியல் அறிஞர் இரா.கிருஷ்ணமூர்த்தி. கணினியில் தமிழ் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் முதன் முதலில் எழுத்துக்களை உருவாக்கி எழுத்து சீர்திருத்தம் செய்தவர். தமிழ் மொழி, தமிழ் சமூகத்தின் வரலாற்று பழமையை நிறுவ முக்கிய சான்றாக இவரது நாணய கண்டு பிடிப்புகள் பயன்பட்டன. சங்க கால சமூகத்தில் நாணயங்கள் வெளியிடப்படவில்லை. வணிகத்திற்கு பண்ட மாற்றும் முறை மட்டுமே இருந்தது என்ற கருத்தை மாற்றி அமைத்ததோடு சங்க கால அரசர்களின் காலத்தை மீள் பரிசோதனை செய்ய உதவியது இவரது நாணய ஆய்வுகள் தான். இவரது ஆய்வுகள் கல்லுாரி பாட நுால்களில் இடம்பெற வேண்டும். இவருக்கு சிறப்பு தபால் தலை, நினைவு நாணயம் வெளியிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.கண்காட்சியில் இந்தியா, சீனா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், எகிப்து, ஸ்வீடன், அரேபியா என 200க்கும் மேற்பட்ட நாடுகளின் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. நுாலகத்தில் சங்க கால நாணயவியலின் தந்தை இரா.கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை வரலாறு, நாணயவியல் ஆய்வு கட்டுரைகளை மாணவர்கள் எளிதில் பெறும் வகையில் க்யூ.ஆர்., கோடு சேவை ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்