பாலக்காடு மருத்துவ கல்லுாரியில் மாணவர் சேர்க்கை உயர்த்த பரிந்துரை!
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மருத்துவக் கல்லுாரியில், 150 மாணவர்கள் சேர்க்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, என, முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.கேரள மாநிலம், பாலக்காடு மருத்துவ கல்லுாரியில், உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவை காணொளி வாயிலாக, முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார். பழங்குடியின நலத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.மின்சார துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பழங்குடியின நலத்துறை தலைமை செயலாளர் ஜெயதிலகன், எம்.பி., ஸ்ரீகண்டன், எம்.எல்.ஏ.,க்கள் பிரபாகரன், ஷாபி பரம்பில், சாந்தகுமாரி, பாபு, சுமோத், மாவட்ட ஊராட்சி தலைவர் பினுமோள், பாலக்காடு நகராட்சி தலைவர் பிரமீளா ஆகியோர் கலந்து கொண்டனர்.முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:பாலக்காடு மருத்துவக் கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கு தற்போது உள்ள, 100 இடங்களை, 150 ஆக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. புதிதாக, 42 ஆசிரியர்களை கல்லுாரியில் பணியமர்த்த உள்ளோம்.பாலக்காடு மருத்துவக் கல்லுாரிக்காக, இதுவரை, 4.89 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மற்ற செலவுகளுக்காக, 90 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினர். பழங்குடியின நலத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:மருத்துவக் கல்லுாரியில் பழங்குடியின மாணவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படும். பாலக்காட்டில் உள்ள செவிலியர் கல்லுாரியிலும் பழங்குடியின மாணவர்கள் சேர்க்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அடுத்த ஆண்டு முதல், பாலக்காடு மருத்துவக் கல்லுாரியில் நான்கு முதுகலை படிப்புகள் தொடங்கப்படும். மருத்துவக் கல்லுாரிக்கு இரண்டு பஸ்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் பேசினார்.மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி பேசுகையில், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் கல்லுாரியில், விபத்து மற்றும் அறுவை சிகிச்சை மையம் அமைக்க வேண்டும். மருத்துவ படிப்பை முடிக்கும் பழங்குடியின மாணவர்களுக்கு, அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.