தினமலர் கோடை கால பயிற்சியால் குழந்தைகள் குதுாகலம்
கோவை: எண்ணங்களை வண்ணங்களாக தீட்டுவதில், மட்டற்ற மகிழ்ச்சியடைபவர்கள் குழந்தைகளே என்பதை, தினமலர் கோடை கால பயிற்சி முகாமில் பங்கேற்ற குழந்தைகள் நிரூபித்துள்ளனர்.கோவை காளப்பட்டி நேரு நகர், மவுண்ட் ரெயின் டிராப் அபார்ட்மென்டில் உள்ள குழந்தைகள், பெண்களுக்கு தினமலர் நாளிதழ் சார்பில், 'கலையும், கை வண்ணமும்' என்ற, ஓவிய பயிற்சி போட்டி நடந்தது.பெவிக்ரில், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் இணைந்து போட்டியை நடத்தின. நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு, பெவிக்ரில் நிறுவனம் சார்பில் வரைகலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.அதோடு, வண்ணம் தீட்டுவதற்கும், வெட்டி ஒட்டுவதற்கும் கலை நுணுக்கம் கொண்ட படங்களும் தரப்பட்டன. இரண்டு நாள் பயிற்சியை, பெவிக்ரில் சார்பில் பயிற்சியாளர்கள் அர்ச்சனா பிரசாத், உமா பழனியப்பன் நடத்தினர். முதல் நாள் காலையில் ஆர்வமுடன் குழந்தைகளும், பெண்களும் பங்கேற்றனர்.சமையலறை வேலைகளுக்கும், பொழுது போக்கு அம்சங்களுக்கும், குட்பை சொல்லிவிட்டு, இரு நாள் பயிற்சியில் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். துவக்கம் முதலே பரபரப்பான குழந்தைகள், சுறுசுறுப்புடன் செயல்பட துவங்கினர்.வீட்டில் செல்போன்களுக்கும், 'டிவி' யையும் பார்த்து போர் அடித்து போன குழந்தைகளுக்கு, புதிய உற்சாகம் கிடைத்தது. 'பெவிக்ரில்' பயிற்சியாளர்கள், வண்ணம் தீட்டும் முறைகளை கற்றுத் தந்தனர்.நிகழ்ச்சியில் பார்வையாளர்களாகவும், விருந்தினர்களாகவும் மவுண்ட் ரெயின் டிராப் அபார்ட்மென்ட் குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் மலர்வண்ண பாண்டியன், நிர்வாகிகள் கோபிநாத், கிருஷ்ணமுர்த்தி, சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பெரும் மகிழ்ச்சி!பயிற்சியில் பங்கேற்ற சிறுமி தன்யா, தினமலர் சார்பில் நடக்கும் இந்த வண்ண பயிற்சிக்கு வாய்ப்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். கோடை விடுமுறையில் இது போன்ற வாய்ப்பு, புதிய அனுபவத்தை அளித்துள்ளது. சந்திராயன் மாடலை கைகளால் செய்து பார்த்ததில், அதன் பொருள் மனதில் ஆழப்பதிந்தது. பயனுள்ள பயிற்சி பட்டறையாக இது அமைந்தது, என்றார்.தினமலருக்கு பாராட்டுஅபார்ட்மென்ட் நிர்வாகிகளில் ஒருவரான சண்முக சுந்தரம், சமுதாய முன்னேற்றத்துக்கான சிந்தனை கொண்ட நாளிதழ் தினமலர். மக்களின் பிரச்னையை முன்னிறுத்தி தீர்வு காண பாடுபடும் ஊடகமாக திகழ்ந்து வருகிறது. மக்களுக்காக இது போன்ற நிகழ்வுகளை நடத்துவது மிக்க மகிழ்ச்சியை தருகிறது, என்றார்.பெண்களுக்கு அவசியம்ஓவிய பயிற்சியில் பங்கேற்ற கமலாம்பிகை, பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து, இது போன்ற பயிற்சிகளை தருவது பயனுள்ளதாக இருந்தது. பெண்கள், தங்களது நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள இது போன்ற பயிற்சிகள் அவசியம். மாறி வரும் உலகில், மனதை ஒருநிலைப்படுத்தவும், குழப்பங்கள், மன அழுத்தத்திலிருந்து விடுபட இப்பயிற்சிகள் உதவும், என்றார்.