உள்ளூர் செய்திகள்

கார்பன் உமிழ்வு இல்லாத திமி; குமரகுரு மாணவர்கள் அசத்தல்

கோவை: இந்தோனேசியாவில் நடைபெறும், புகழ்பெற்ற ஷெல் இகோ மாரத்தான் ஆசிய பசிபிக் போட்டிக்காக, ஹைட்ரஜனில் இயங்கும் வாகனத்தை, கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கி அசத்தியுள்ளனர்.இந்தோனேசியாவில், 39 ஆண்டுகளாக, ஷெல் இகோ மாரத்தான் ஆசியா பசிபிக் போட்டி நடந்து வருகிறது. குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட, எதிர் காலத்தைக் கட்டமைக்கும் நோக்கத்தில் நடத்தப்படும் இப்போட்டி, உலக அளவில் முக்கியத்துவமும், பெருமை வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.இப்போட்டியில் பங்கேற்கும் முதல் இந்திய அணி என்ற பெருமையை, கோவை குமரகுரு தொழில் நுட்பக் கல்லூரியின், ரிநியூ அணி பெற்றுள்ளது.ஜீரோ கார்பன் உமிழ்வு கொண்ட வாகனத்தை, 8 மாணவர்கள் கொண்ட இந்த அணி உருவாக்கியுள்ளது. ஹைட்ரஜன் பியூயல் செல், பி.எல்.டி.சி., மைடிரைவ் மோட்டார் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி, உருவாக்கியுள்ள இந்த மூன்று சக்கர வாகனத்துக்கு, திமி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை, ரிநியூ அணியினர், குமரகுரு கல்லூரி வளாகத்தில், நேற்று அறிமுகம் செய்தனர். மொனாக்கோவில் நடைபெறும் ஆற்றல் படகுப் போட்டி -2024ல், குமரகுரு கல்லூரியின் ஸீ சக்தி அணி பங்கேற்கிறது.பேட்டரி, சோலார் போன்ற மாற்று எரிசக்தி மூலம் இயங்கும் படகுகளை உருவாக்க, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான உலகளாவிய போட்டியை, மொனாக்கோ அரசு நடத்தி வருகிறது.இப்போட்டியில் இந்தியாவில் இருந்து ஒரே அணியாக, குமரகுரு கல்லூரி மாணவர்கள் பங்கேற்கின்றனர். இக்குழுவில் 12 மாணவர்கள் உள்ளனர். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, இக்கல்லூரி மாணவர்கள் போட்டியில் பங்கேற்கின்றனர்.லித்தியம் பெரோபாஸ்பேட் பேட்டரியைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு உகந்த படகை உருவாக்கியுள்ள இக்குழு, தங்களது படகுக்கு யாழி 3.0 எனப் பெயரிட்டுள்ளது.சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் இரு அணிகளையும், கல்லூரி செயல் இயக்குனர் முனியசாமி, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் எழிலரசி, குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரி முதல்வர் விஜிலா கென்னடி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்